வரைவு பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் படிவம்-6 சமர்பிக்க தயங்காதீர்கள்: தேர்தல் ஆணையம் விளக்கம்
புதுடெல்லி: அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் (எஸ்ஐஆர்) வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயரை சேர்க்க, புதிய விண்ணப்பதாரர்களுக்கான படிவம் 6-ஐச் சமர்ப்பிக்க தயங்குவதாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
படிவம்-6ல் ‘முதன்முறையாக வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பிக்கிறேன்’ என்று ஒரு உறுதிமொழியை அளிக்க வேண்டியுள்ளது. இது தவறான தகவலை அளிப்பதாகக் கருதப்பட்டு, 1950ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 31-வது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்குமோ என்று அஞ்சுகின்றனர்.
இந்த அச்சம் தேவையற்றது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத வாக்காளர்கள், ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும், இறுதி வாக்காளர் பட்டியலில் மீண்டும் தங்களை சேர்த்துக்கொள்ள படிவம் 6-ஐ சமர்ப்பிக்கலாம். இது வேண்டுமென்றே தவறான தகவலை அளித்ததாகக் கருதப்படாது. இவ்வாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


