கார்த்திக் சுப்பராஜ் திரைப்படங்கள் என்றாலே, வழக்கமான கதைக்குள் வித்தியாசமான பார்வையைப் புகுத்தும் முயற்சி இருக்கும். அந்த வரிசையில் வெளியாகியிருக்கும் ‘டோரதி’ படமும் வெளிப்
பார்வைக்கு ஒரு கதையாகத் தோன்றினாலும், அதன் உள்ளே பல அடுக்குகளைக் கொண்ட சமூகப்பார்வை கொண்டிருக்கிறது.
ஒரு கிராமப்புறப் பின்னணியில் நகரும் இந்தக் கதை, ஆண்மை, நட்பு, காதல், குடும்பக் கௌரவம், வன்முறை, சாதிய மனநிலை எனப் பல்வேறு சமூகக் கூறுகளைத் தொட்டுச் செல்கிறது. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி, படத்தின் மையத்தில் இருப்பது மனிதர்களுக்கு இடையிலான உறவுதான்.
குறிப்பாக கார்த்தி, சுப்பு ஆகிய இரு கதாபாத்திரங்களின் உறவு படத்தின் மிக முக்கியமான அம்சமாகத் தெரிகிறது. நட்பாகத் தொடங்கும் இந்த உறவு, அவர்கள் வாழும் சூழலும் அவர்களுக்குள் உருவாகும் முரண்பாடுகளும் காரணமாக வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது. ஒருவர் வன்முறையை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் உலகத்துக்குள் நகரும்போது, மற்றொருவர் அதிலிருந்து வெளியேறுவதற்கான வழியைத் தேடுகிறார். துவக்கத்தில் வன்முறை, ஆண் என்கிற மேலாதிக்க உணர்வு என பயணிக்கும் சுப்பு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வேறு திசைக்கும், எதற்கும் பயந்து அடி வாங்கிக்கொண்டிருந்த கார்த்தி, வன்முறை, ஆண் என்கிற ஆதிக்க நிலை என மாறுவதும் உள்ளிட்ட இந்த முரண்பாடுதான் கதைக்கு அழுத்தத்தையும் உயிரோட்டத்தையும் அளிக்கிறது.
நாம் வாழும் சமூகத்தில், “ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று சிறு வயதிலிருந்தே உருவாக்கப்
படும் பல கட்டுப்பாடுகளையும் திரைப் படம் கேள்விக்குள்ளாக்குகிறது. இதற்கு உதாரணமாக ‘‘ஆங்காங்கே சொல்லப்
படும் ‘டேய்! ஆம்பள அழக்குடாதுடா!'', டேய்! நாமெல்லாம் கெத்துடா… பெருசாகி இப்படி எவளையாவது புடிச்சி கிஸ் அடிக்கணும்டா!’’ என துவங்கி, கோபம், வன்முறை, பழிவாங்குதல், குடும்பக் கௌரவம் ஆகியவற்றை ஆண்மையின் அடையாளங்களாகக் காட்டிக் கொண்டு வந்து, அதையே கேள்விக்குள்ளாக்கி நிற்கிறது திரைக்கதை. உணர்வுகளை வெளிப்படுத்துவதும் சக மனிதன் எப்படி இருந்தாலும், என்ன பாலினமாக இருப்பினும் ஏற்றுக்கொள்வதும் மனிதத் தன்மையின் வெளிப்பாடுகளே என்பதைப் படம் பேசுகிறது.
இந்த உலகத்துக்குள் வரும் ‘‘டோரதி'' என்ற கதாபாத்திரம் வெறும் கதாநாயகியாக மட்டும் நின்றுவிடவில்லை. ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருக்கும் அந்த ஆண்களின் உலகத்துக்குள் வேறொரு பார்வையை அவள் கொண்டு வருகிறாள். அவளுடைய இருப்பு, கதாபாத்திரங்களின் எண்ணங்களையும் அவர்களுக்குள் மறைந்திருக்கும் முரண்பாடுகளையும் வெளிக்கொண்டு வருகிறது. எனவே டோரதி கதையின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், கதையின் மனிதநேயத்தைத் தூண்டும் முக்கியமான காரணியாகவும் மாறுகிறாள்.
கீர்த்தி சுரேஷ் இந்தக் கதாபாத்திரத்தை இயல்பாகக் கையாண்டிருக்கிறார். குறிப்பாக அதிகமான வசனங்களைச் சார்ந்திராமல், பார்வை மற்றும் உடல்மொழி வழியாக உணர்வுகளை வெளிப்படுத்தும் தருணங்களில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது.
ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோருக்கும் இந்தத் திரைப்படம் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. அவர்களுடைய கதாபாத்திரங்கள் வெறுமனே கதையை நகர்த்துவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. இருவருக்குள்ளும் ஏற்படும் உணர்வு மாற்றங்களை அவர்களுடைய நடிப்பின் வழியே படம் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக மௌனம், பார்வை, உடல்மொழி ஆகியவை பல இடங்களில் வசனங்களைவிட அதிகமாகப் பேசுகின்றன. இளையராஜாவின் இசை படத்துக்கு உயிர்.
அதே நேரத்தில், ‘டோரதி’ எல்லா பார்வையாளர்களுக்கும் ஒரே மாதிரியான அனுபவத்தைத் தரும் திரைப்படம் என்று கூறமுடியாது. படம் பேசும் சில கருத்துகள் விவாதத்திற்குரியவை. சில இடங்களில் அதன் கருத்துகள் நேரடியாகச் சொல்லப்படுவதாகவும் தோன்றலாம். ஒரு சிலருக்கு பளிச்சென சொல்லப்பட்ட உண்மையாக முகம் சுளிக்கச் செய்யலாம். ஆனால் அந்த மனஉறுத்தலை உருவாக்குவதும், நாம் யார் எதை எப்படி பார்க்கிறோம் என நமக்கே தெளிய வைக்க ஒரு கண்ணாடி போலவே அமைந்ததும் கூட இத்திரைப்படத்தின் நோக்கமாக இருக்கலாம்.
‘டோரதி’யை வெறும் வன்முறை, நட்பு அல்லது காதல் கதை என்று மட்டும் பார்க்கமுடியாது. அந்த எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்கும் மனிதர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள முயலும் திரைப்படமாக இதைப் பார்க்கலாம். நம் அருகில் நம்முடன் இத்தனை காலம் வாழ்ந்த மனிதர்கள் இந்தக் கதையை எப்படிக் காண்கிறார்கள் என அறிந்து கொள்ளலாம்.
இறுதியில், இந்தத் திரைப்படம் நம்மிடம் ஒரு முக்கியமான சில கேள்விகளை முன்வைக்கிறது: சமூகமும் குடும்பமும் உருவாக்கிய ‘ஆண்மை’ அதனுடன் தொடர்பு கொள்ள வைக்கும் ‘ஜாதி வெறி' என்ற வரையறையைப் பின்பற்றுவதா முக்கியம்? அல்லது தனக்குள் இருக்கும் உணர்வுகளையும் மனிதநேயத்தையும் ஏற்றுக்கொள்வது முக்கியமா ? குறிப்பாக இது அறிவியல், இதற்கு பின்னால் பிறப்பில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் காரணம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டோமா? யாரையும், எதற்காகவும் நாம் கட்டாயப் படுத்தக் கூடாது என்பதைப் புரிந்து கொண்டோமா?'' இப்படியான பல கேள்விகள் உள்ளே அடங்கியிருக்கிறது. அந்தக் கேள்விகளுக்கான பதிலை பார்வையாளரிடமே
விட்டுவிட்டு ‘டோரதி’ நகர்கிறாள்.
- மகளிர் மலர் குழு


