ஊக்க மருந்து உறுதியானதால் நம்பர் 2 வீராங்கனை இகா ஸ்வியடெக் டென்னிஸ் ஆட 1 மாதம் தடை
இந்தாண்டு துவக்கத்தில் ஆடிய போட்டிகளில் சரிவுகளை கண்ட அவர், 2024, அக்டோபர் 21ம் தேதி, உலகளவில் நம்பர் 2 நிலைக்கு தள்ளப்பட்டார். இவர், பெண்கள் ஒற்றையர் போட்டிகளில் 22 முறை பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 4 முறையும், அமெரிக்க ஓபன் பட்டத்தை ஒரு முறையும் பெற்றவர். இந்நிலையில், கடந்த ஆகஸ்டில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கு முன், இகா ஸ்வியடெக்கின் சிறுநீர் ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. முடிவில், அவர் டிரைமெடாஸிடைன் (டிஎம்இசட்) எனப்படும் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, 1 மாதம் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க இகாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் வழக்கமாக பல ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்படும். ஆனால், ஸ்வியடெக் உட்கொண்ட மருந்தில் அவர் அறியாமல் மிக சிறிய அளவில் டிஎம்இசட் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே அவருக்கு ஒரு மாதம் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச டென்னிஸ் கண்காணிப்பு ஆணையம் (ஐடிஐஏ) தெரிவித்துள்ளது. இகா ஸ்வியடெக் ஊக்க மருந்து பிரச்னையில் ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது டென்னிஸ் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.