Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

1 லட்சம் டாலர் வசூல் எச்1பி விசா கட்டணத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் தடை

வாஷிங்டன்: அமெரிக்காவில் உயர் திறன் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர் புதிய எச்1பி விசாக்களைப் பெறுவதற்கு 1,00,000 டாலர் கட்டணம் விதித்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிபர் டிரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களைப் பணியமர்த்த அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் எச்1பி விசாவையே நம்பியுள்ளன.

எனவே டிரம்ப் முடிவை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி லியோ டி. சொரோகின் ஜூன் 8 அன்று அமெரிக்க செனட் சபையால் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோத வரி என்று கூறி, இந்தக் கட்டணத்தை ரத்து செய்தார். இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு டிரம்ப் அரசு விடுத்த கோரிக்கையை, பாஸ்டனை தளமாகக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று நிராகரித்தது.

இதுதொடர்பான உத்தரவில் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் ஜூன் 8ஆம் தேதியிட்ட குறிப்பாணை, உத்தரவு மற்றும் அதனுடன் தொடர்புடைய தீர்ப்பு ஆகியவற்றின் மீதான மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், அவற்றை நிறுத்தி வைக்குமாறு பிரதிவாதிகள் விடுத்த கோரிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம்’ என்று தீர்ப்பளித்தனர்.

* எச்1பி விசாக்களுக்கு 3 ஆண்டு தடை 1 லட்சம் டாலர் கட்டணத்தை சட்டமாக்க புதிய மசோதா அறிமுகம்

புதிய எச்1பி விசாக்களை வழங்குவதை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கவும், டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்டு பின்னர் கூட்டாட்சி நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட 1,00,000 டாலர் கட்டணத்தை சட்டப்பூர்வமாக்கவும் அமெரிக்க செனட் சபையில் ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதிக்கும் அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையிலான விசாக்களை அமெரிக்கா வழங்கக்கூடாது என்று மொன்டானாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் டிம் ஷீஹி கூறினார்.