“பால் குடிக்க மாட்டேன்… தயிரும் வேண்டாம்!” என்று சில குழந்தைகள் பிடிவாதம் பிடிப்பதைப் பல வீடுகளில் பார்க்கலாம். குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் பிடிக்காமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. பசும்பாலின் வாசனை அல்லது சுவை பிடிக்காமல் இருக்கலாம். சில குழந்தைகளுக்கு பாலைக் குடித்த பிறகு வயிற்றில் அசௌகரியம், உப்புசம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம். தயிரின் புளிப்புச் சுவை அல்லது அதன் மணமும் சில குழந்தைகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதேபோல், உணவின் நிறம், மணம், தன்மை ஆகியவற்றில் அதிக உணர்திறன் கொண்ட குழந்தைகள் குறிப்பிட்ட உணவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பதும் உண்டு. குறிப்பாக சில குழந்தைகளுக்கு லேக்டிக் அலர்ஜியும் இருக்கும். என்பதாலேயே பால், தயிரை ஒதுக்குவார்கள்.
சில நேரங்களில் சிறு வயதில் ஏற்பட்ட ஒரு விரும்பத் தகாத அனுபவமும் குழந்தையின் உணவுப் பழக்கத்தை மாற்றியிருக்கும். குறிப்பிட்ட உணவை ஒருமுறை சாப்பிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தால், பின்னர் அந்த உணவையே குழந்தை தவிர்க்கலாம். மேலும், “பால் குடித்தால்தான் ஆரோக்கியம்” என்று வற்புறுத்தி மீண்டும் மீண்டும் கொடுப்பதும், சில குழந்தைகளிடம் அந்த உணவின் மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்தக்கூடும்.
அப்படியென்றால் பால் பிடிக்காத குழந்தைக்கு தேவையான கால்சியம், புரதம் உள்ளிட்ட சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுமா? அவசியமில்லை. பால் மற்றும் தயிரைத் தவிர்த்தாலும், சரியான மாற்று உணவுகளைத் தேர்வு செய்தால் குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
தாவரப் பால் அருமையான மாற்று வழி
பசும்பாலை விரும்பாத குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற வகையில் சில தாவர அடிப்படையிலான பால் வகைகள் மாற்றாக அமையலாம். ஆனால் எல்லா தாவரப் பால்களும் ஒரே அளவு ஊட்டச்சத்துக்களை வழங்குவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சோயா பால் - நல்ல புரதம் நிறைந்த பால்
சோயா பால் தாவர அடிப்படையிலான பால்களில் ஊட்டச்சத்து அடிப்படையில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் புரதம் கணிசமான அளவில் உள்ளது. கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் சேர்க்கப்பட்ட செறிவூட்டப்பட்ட வகைகளை (தேர்வு செய்தால், பால் மூலம் கிடைக்க வேண்டிய சில முக்கிய சத்துக்களை ஈடு செய்ய உதவும்.
ஓட்ஸ் பால் - மென்மையான சுவை
ஓட்ஸ் பால் மென்மையான சுவை கொண்டிருப்பதால் சில குழந்தைகள் இதை எளிதாக ஏற்றுக்கொள்ளலாம். இதில் நார்ச்சத்து மற்றும் பீட்டா-குளுக்கான் போன்றவை உள்ளன. ஆனால் சோயா பாலை ஒப்பிடும்போது இதன் புரத அளவு பொதுவாகக் குறைவாக இருக்கும். எனவே, ஓட்ஸ் பாலைப் பயன்படுத்தும் குழந்தைக்கு பருப்பு, முட்டை, பனீர் போன்ற பிற உணவுகளிலிருந்தும் போதுமான புரதம் கிடைக்கச் செய்வது அவசியம்.
பாதாம் பால் - வைட்டமின் ஈ
பாதாம் பால் வைட்டமின் ஈ போன்ற சத்துக்களை வழங்கக்கூடியது. ஆனால் இதில் புரதம் மிகவும் குறைவாக இருக்கும். எனவே, குழந்தையின் முழுமையான பால் மாற்றாக இதை மட்டும் நம்புவது சரியானது அல்ல. கால்சியம் மற்றும் வைட்டமின் டி சேர்க்கப்பட்ட உணவு வகையை இதனுடன் தேர்வு செய்வது நல்லது.
பட்டாணிப் புரதப் பால் - புரதத்திற்கு முக்கியத்துவம்
பட்டாணிப் புரதப் பால் என்பது பட்டாணியை சாதாரணமாக அரைத்து தயாரிப்பது அல்ல. பட்டாணியில் இருந்து பெறப்படும் புரதத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சில வகைகளில் புரதம் அதிகமாகவும், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் சேர்க்கப்பட்டும் இருக்கும். பசும்பாலுக்குப் பதிலாக அதிக புரதம் கொண்ட தாவர அடிப்படையிலான பாலைத் தேடும் பெற்றோருக்கு இது ஒரு தேர்வாக இருக்கலாம்.
முந்திரி பால் - சுவைக்காக விரும்பக்கூடியது
முந்திரி பால் அடர்த்தியான, மென்மையான தன்மையைக் கொண்டிருப்பதால் சில குழந்தைகளுக்குப் பிடிக்கலாம். ஆனால் இதில் புரதம் குறைவாகவே இருக்கும். எனவே, இதைத் தேர்வு செய்தால் குழந்தையின் உணவில் பிற புரத உணவுகளும் இடம்பெற வேண்டும்.
தேங்காய்ப் பால் - சுவையானது, ஆனால்…
தேங்காய்ப் பால் தனித்துவமான சுவை கொண்டது. சில குழந்தைகள் இதை விரும்பி அருந்தலாம். ஆனால் குடிப்பதற்காக தயாரிக்கப்படும் தேங்காய் அடிப்படையிலான பானங்களில் புரதம் குறைவாக இருக்கும். எனவே, பசும்பாலுக்கு முழுமையான மாற்றாக இதை மட்டும் பயன்படுத்துவது பொருத்தமானதல்ல.
அரிசிப் பால் - லேசான சுவை
அரிசிப் பால் லேசான சுவையைக் கொண்டிருக்கும். பால் அல்லது சில கொட்டை வகைகளைத் தவிர்க்க வேண்டிய குழந்தைகளுக்கு இது சில நேரங்களில் ஒரு மாற்றாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் இதிலும் புரதம் குறைவாக இருப்பதால், குழந்தையின் ஒட்டுமொத்த உணவில் புரதம் போதுமான அளவில் கிடைக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன?
தாவரப் பால் வாங்கும்போது “தாவர அடிப்படையிலானது” என்ற பெயரை மட்டும் பார்த்து தேர்வு செய்யக் கூடாது. அதன் ஊட்டச்சத்து விவரங்களையும் கவனமாகப் பார்க்க வேண்டும்.
குழந்தைகளுக்குத் தேர்வு செய்யும்போது சர்க்கரை சேர்க்கப்படாத வகைக்கு (No Added Sugar) முன்னுரிமை கொடுப்பது நல்லது. கால்சியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். அதேபோல், புரதத்தின் அளவும் முக்கியமானது.
பால் வேண்டாம் என்றால்… உணவில் வேறு வழிகள் இருக்கின்றன!
குழந்தை பசும்பால், தயிர் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்த்தால், அதனால் கிடைக்க வேண்டிய சத்துக்களை வேறு உணவுகள் மூலம் வழங்கலாம். பனீர், எள், ராகி, கீரைகள், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, முட்டை உள்ளிட்ட உணவுகளை குழந்தையின் வயதுக்கு ஏற்ற வகையில் உணவில் சேர்க்கலாம்.
முக்கியமாக, குழந்தை ஒரு உணவை மறுக்கிறது என்பதற்காக அதை வற்புறுத்தி ஊட்டுவதற்குப் பதிலாக, அதே சத்துக்களை வழங்கக்கூடிய வேறு உணவுகளை அறிமுகப்படுத்துவது நல்ல அணுகுமுறையாக இருக்கும்.
குழந்தை பாலை வெறுக்கிறது என்பதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. “பால் குடித்தால்தான் ஆரோக்கியம்” என்பதைக் காட்டிலும், “தேவையான சத்துக்கள் எந்தெந்த உணவுகள் மூலம் கிடைக்கின்றன?” என்பதுதான் முக்கியம்.
குழந்தையின் வயது, உணவுப் பழக்கம் மற்றும் ஒவ்வாமை போன்றவற்றைப் பொறுத்து சரியான மாற்றைத் தேர்வு செய்வதே சிறந்த வழி. குறிப்பாக ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு தாய்ப்பால் அல்லது குழந்தைகளுக்கான பால் கலவை தவிர வேறு பால் வகைகளை தன்னிச்சையாக முக்கிய பானமாக வழங்கக் கூடாது. சந்தேகம் இருந்தால் குழந்தைகள் நல மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது.
- ஷாலினி நியூட்டன்


