ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போய் இருக்கிறது. நாளை வரை தான் கூட்டத்தொடர் உள்ள நிலையில் ஒரு அமர்வு கூட முழுமையாக நிறைவு பெறாமல் அமளியில் அவை செயல் இழந்து உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமளியை பொருட்படுத்தாமல் மிக முக்கிய மசோதாக்களை மோடி அரசு அதிவேகமாக எந்தவித விவாதமும் இல்லாமல் நிறைவேற்றி வருகிறது. தொடர்ந்து 12 ஆண்டுகள் இந்த நாட்டை ஆளும் தலைமைப்பதவியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு இது அழகா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மொத்தம் 25 நாட்களில் 19 அமர்வுகளாக திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆனால் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம், அயோத்தி ராமர் கோயில் உண்டியல் காணிக்கை திருட்டு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் நாடாளுமன்றம் முழுமையாக முடங்கிப்போய் உள்ளது. இதை எல்லாவற்றையும் விட பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கடந்த 16 நாட்களாக அவைக்கு வரவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தினமும் நாடாளுமன்றம் வரும் அவர்கள் எதிர்க்கட்சிகள் அமளியால் அவைக்கு வரவில்லை. அதைவிட முக்கியமாக அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும், கூடும் போது விவாதமின்றி முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப் படுகின்றன. கேரளா மாநிலத்தை ‘கேரளம்’ என பெயர் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026 எந்தவித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
அதே போல் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக (திருத்த) மசோதா 2026 அமளிக்கு மத்தியிலும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இந்த கூட்டத்தொடரில் இதுவரை நிறைவேற்றப்பட்ட 11 மசோதாக்களில், இரண்டு மீது மட்டுமே விவாதம் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள சட்டங்கள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலங்களவையிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. அனைத்து மசோதாக்களும் அவசர அவசரமாக எந்தவித விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
டெல்லியில் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த யார் உத்தரவிட்டது என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்த வேண்டும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறை நடவடிக்கைக்காகப் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும். 3வதாக அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டுக்கு பிரதமர் மோடி பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை. ஆனால் டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை என்பது பாஜவின் அறிக்கை. எனவே இருதரப்பும் இழுபறியாக இருப்பதால் அவை முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது.
அவையில் உள்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்கிறது காங்கிரஸ். ஆனால் உள்துறை அமைச்சர் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கத் தயாராகவே இருக்கிறார். ஆனால் அவர் பதில் அளிக்கும் போது எதிர்க்கட்சிகள் அமைதியாக இருந்து கேட்க வேண்டும். அமளி செய்யக்கூடாது என்பது பா.ஜ அரசின் கோரிக்கை.
இருதரப்பினரும் முரண்டுபிடித்துக்கொண்டு நிற்பதால் முடிவில்லாத அமளியால் அவை முடங்கிப்போய் நிற்கிறது. மழைக்கால கூட்டத்தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்றும், நாளையும் தான் நடைபெற உள்ளது. இதனால் மழைக்கால கூட்டத்தொடர் எந்தவித விவாதமும் இல்லாமல் முடிவது மோடி அரசுக்கு அழகல்ல.



