ஆவணப்படத்துக்கான சர்ச்சை தொடர்ந்து நீடிக்கிறது தனுஷை மறைமுகமாக சாடிய நயன்தாரா: இன்ஸ்டா ஸ்டோரியில் கடும் தாக்கு
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரௌடி தான்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இடம்பெற்ற சில காட்சிகளைப் பயன்படுத்தியது தொடர்பாக தனுஷுக்கும், நயன்தாராவுக்கும் இடையே சட்டரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்பட்டது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நயன்தாராவின் வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபைரி டேல்’ என்ற ஆவணப்படத்தில், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘நானும் ரௌடி தான்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இடம்பெற்ற காட்சிகளைப் பயன்படுத்தியதற்காக தனுஷ் இழப்பீடு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. ‘நானும் ரௌடி தான்’ படப்பிடிப்பு காட்சிகள் மற்றும் பிரச்னைகள் குறித்தும், தனுஷ் குறித்தும் நயன்தாரா கடுமையாக தாக்கி வெளியிட்டிருந்த அறிக்கை கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது தனுஷ் தரப்பில் நயன்தாராவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, இருவருக்கும் இடையே ெதாடர்ந்து சர்ச்சையை அதிகரித்து வருகிறது. நயன்தாரா.
விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் தனுஷை குற்றம்சாட்டி பதிவுகள் வெளியிட்ட நிலையில், இதுவரை தனுஷ் எந்த விளக்கமும், பதிலும் அளிக்கவில்லை. இப்பிரச்னையை அவர் சட்டரீதியாக அணுகி வருகிறார். இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘கர்மா என்ன சொல்கிறது என்றால், பொய்களைப் பேசி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் கெடுக்க நினைத்தால், அது அசலும், வட்டியுமாக உங்களிடமே மீண்டும் வந்து சேரும்’ என்று மறைமுகமாக பதிவிட்டுள்ளார்.
இது வைரலாகி மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ‘சிம்புவை காதலித்து ஏமாற்றினீர்கள். பிரபுதேவாவை காதலித்து, அவரது மனைவியிடமிருந்து அவரை பிரித்தீர்கள். இந்த கர்மாவும் உங்களை சும்மா விடாது’ என நயன்தாராவை நெட்டிசன்கள் தாக்கி வருகிறார்கள்.


