Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக மாணவர் அணியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக மாணவர் அணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார். அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பாஜ அரசைக் கண்டித்து ஜூன் 18ம் தேதி(இன்று) காலை 10 மணிக்கு திமுக மாணவர் அணி சார்பில், மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! நாளை(இன்று) மதுரை வீரகனூரில், திமுக மாணவர் அணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.