Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திமுக ஆட்சியில் விரிவடைந்த அறிவுலகம்; தமிழ்நாட்டின் நூலகப்புரட்சி ஒரு வரலாற்றுப் பார்வை: தலைமுறைகளை உயர்த்திய கட்டமைப்பு

ஒரு புத்தகம், ஒருவரின் வாழ்க்கையை மாற்றலாம்; ஒரு நூலகம், ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையே மாற்றும். பள்ளியை தாண்டி கற்கும் வாய்ப்பை வழங்கும் பொது நூலகங்கள், ஏழை எளிய மக்களின் அறிவுக் கதவுகளைத் திறக்கும் திறவுகோல்கள். தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகள் தொடங்கி மாநகரங்கள் வரை இந்த அறிவுத் திறவுகோல்களை விரிவுபடுத்துவதில் திமுக ஆட்சிக் காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தனித்த கவனம் பெறுகின்றன.

ஒரு காலத்தில் பாடப்புத்தகங்களே பல மாணவர்களுக்கு அறிவின் எல்லையாக இருந்தன. வீட்டில் தனி அறை இல்லை; படிக்க அமைதியான சூழல் இல்லை; போட்டித் தேர்வுகளுக்கான விலை உயர்ந்த நூல்களை வாங்க வசதியில்லை. ஆனால், ஊரின் ஒரு மூலையில் செயல்படும் சிறிய நூலகம், அத்தகைய மாணவர்களுக்குப் புதிய வாய்ப்புகளைத் திறக்க முடியும்.

நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தில் தொடங்கி, உலக அரசியல், அறிவியல், வரலாறு, இலக்கியம், பொருளாதாரம் எனப் பல துறைகளில் அறிவை பெறுவதற்கான பாதைகள் வகுத்தவை நூலகங்கள் தான். இது புத்தகங்களை அடுக்கி வைக்கும் கட்டிடம் அல்ல, அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கான ஜனநாயக கட்டமைப்பு. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், கலைஞர் முதல்வராக இருந்தபோது 1972ம் ஆண்டில் நூலகத்துறைக்கு என தனியாக பொது நூலக இயக்குநரகத்தை உருவாக்கினார்.

இந்தப் பின்னணியில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக் காலங்களில் முன்னெடுக்கப்பட்ட கிராம நூலகத் திட்டங்கள், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்ற பெரிய திட்டங்களை ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டியது அவசியம். நூலகங்கள் என்பவை நகரங்களோடு நின்று விடாமல், புத்தக வாசிப்பை கிராமங்கள் வரை கொண்டு செல்வதற்காக அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 12,618 கிராமப்புற நூலகங்கள் அமைக்கப்பட்டது 2006 முதல் 2011 வரையிலான கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் தான்.

கிராம ஊராட்சிகளில் நூலகங்கள் அமைக்கப்படும்போது, பள்ளி மாணவர்கள் பாடங்களுக்கு அப்பாற்பட்ட நூல்களை வாசிக்கலாம். நாளிதழ்கள் மூலம் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளலாம். அரசு வேலைவாய்ப்புகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பொதுவான மற்றும் துறை சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். ஏராளமான இலக்கியப் படைப்புகளை படிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

நூலகங்களை உருவாக்குவது அறிவார்ந்த சமூக கட்டமைப்புக்கான ஒரு அரிய பணி. அதை விட முக்கியம் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நூலகங்கள் பயன்பாடின்றி முடங்கிவிடாமல் பாதுகாப்பது. அதிமுக ஆட்சியின்போது, கிராம அளவிலான பல நூலகங்கள் முறையான பராமரிப்பு இன்றியும், புதிய போதுமான புத்தகங்கள் இல்லாததாலும் முழு பயன் அளிக்கவில்லை. சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், 2021 - 22ல் 4,116 நூலகங்கள் ரூ.91.75 கோடியில் புதுப்பிக்கப்பட்டன. இதுபோல், 2022 23 நிதியாண்டில் ரூ.84.27 கோடியில் 3,679 நூலகங்கள் 2024 - 25ல் ரூ. 96.84 கோடியில் 4,386 நூலகங்கள் புதுப்பிக்க வகை செய்யப்பட்டது. இதுபோல் நகரங்களில் உள்ள பெரிய நூலகங்கள் ஆய்வு, உயர்கல்வி, போட்டித் தேர்வு தயாரிப்பு, பல்துறை வாசிப்பு ஆகியவற்றுக்கான விரிவான வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்குகின்றன.

சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டு. அறிஞர் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு கலைஞர் ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் ரூ.178.78 கோடி செலவில் அமைக்கப்பட்டு, 2010 செப்டம்பர் 15 ல் திறக்கப்பட்டது. இன்றளவும் மாணவர்கள், ஆய்வாளர்கள் பலரின் அறிவுப்பசியை தீர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சென்னையை மையமாகக் கொண்டிருந்த பெரிய நூலக வசதிகளைத் தாண்டி, தென் தமிழ்நாட்டிலும் நவீன நூலகக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியாக மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் 3.8 ஏக்கர் பரப்பளவில் 2.16 லட்சம் சதுர அடியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது. 6 மாடி கொண்ட இந்த பிரமாண்ட நூலகத்தில் 3.64 லட்சம் புத்தகங்கள் உள்ளன. தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு பாடப்பிரிவுகளில் நூல்களை அணுகும் வாய்ப்பை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட நூலகம் இது.

இதைத் தொடர்ந்து கோவையில் பிரமாண்ட நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டு இதற்கான அறிவிப்பு 2024-25 பட்ஜெட் உரையில் வெளியிடப்பட்டது. 2024 நவம்பரில் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஏறக்குறைய 1.98 லட்சம் சதுர அடியில் நூலகம் ரூ.301.71 கோடி செலவில் கட்டப்பட்டது. இதனைத்தான் தற்போதைய முதல்வர் விஜய் திறந்து வைத்துள்ளார்.

இவ்வளவு ஏன், திருச்சியில் காமராஜர் நூலகம், நெல்லையில் காயிதே மில்லத் நூலகம், சேலத்தில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் அஞ்சலை அம்மாள் அறிவுலகம் என தலைமுறை கடந்தும் பலன் அளிக்கக்கூடிய அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க திமுக ஆட்சியில் நூலகங்கள் கட்டமைக்கப்பட்டன. பசிப்பவருக்கு சோறு கொடுப்பதை விட மீன்பிடிக்க கற்றுத்தருவது அவரது வாழ்நாள் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதோ அப்படித்தான், திமுக ஆட்சில் கட்டப்பட்ட நூலகங்கள்.

கலைஞர், மு.க.ஸ்டாலின் என அடுத்தடுத்து திமுக ஆட்சியில் மட்டும் மொத்தம் 12,614 நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 1,361நூலகங்கள் மட்டுமே அமைந்தன. அதிமுக ஆட்சியில் 2,590 நூலகங்கள் அமைக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி குறைந்த காலமே ஆட்சியில் இருந்தபோதும் அறிவார்ந்த சமுதாயத்தை கட்டமைப்பதில் திமுக ஆட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டதுதான் நூலகப் புரட்சிக்கு காரணம்.

நூலகத்தின் வெற்றி, அதன் கதவுகளைத் திறந்து உள்ளே வரும் வாசகர்களின் எண்ணிக்கையிலும், அங்கிருந்து அறிவைப் பெற்று வெளியேறும் தலைமுறைகளிலும் இருக்கிறது. அத்தகைய அறிவார்ந்த தலைமுறையை உருவாக்க நூலகங்கள் மூலம் அடித்தளமிட்ட திமுக ஆட்சிக் காலங்கள், காலங்கள் கடந்தும் அறிவு பெட்டக வாயிலுக்கான சாட்சியாக இருக்கின்றன என்கின்றனர் இந்த நூலகங்களால் பயன்பெற்ற அறிஞர்கள், ஆர்வலர்கள்.

* திமுக ஆட்சியில் புதுப்பிக்கப்பட்ட நூலகங்கள்

* 2021 - 22 4,116 நூலகங்கள் திட்டச் செலவு ரூ. 91.75 கோடி

* 2022 - 23 3,679 நூலகங்கள் திட்டச்செலவு ரூ.84.27 கோடி

* 2024 - 25 4,386 நூலகங்கள் திட்டச் செலவு ரூ.96.84 கோடி

* தமிழகத்தின் நூலகப் பாரம்பரியம்

* ஆசியாவின் தொன்மையான நூலகங்களில் ஒன்றாக கருதப்படுவது, தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம். 600 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் தஞ்சையை ஆண்ட நாயக்கர், மராட்டியர்கள் ஆட்சியிலும் வளர்ச்சியடைந்தது.

* சென்னையில் உள்ள கன்னிமாரா பொது நூலகம், நாட்டின் தேசிய வைப்பு நூலகங்களில் ஒன்றாக திகழ்கிறது.

* உ.வே.சா. நூலகம், சென்னை: டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் இலக்கிய பாரம்பரியத்தை பாதுகாக்கும் இந்நூலகம், அரிய கையெழுத்து பிரதிகள் மற்றும் அறிய வெளியீடுகளை கொண்டு, இலக்கிய ஆய்வுகளுக்கு உறுதுணையாக உள்ளது.

* மறைமலையடிகள் நூலகம், சென்னை: தமிழ் நூல்கள் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளின் தொகுப்புகள் இங்கு உள்ளன.

* ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சென்னை: பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்றது இது.

* எதிலும் முதல் மாநிலம் இதிலும் முதல் மாநிலம்

கல்வி, தொழில்துறை என துறைதோறும் புதுமைகள், அறிமுகங்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன. இந்த வகையில் சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக பொது நூலகச் சட்டம் 1950ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி இயற்றப்பட்டது.

இதன்பிறகுதான், ஆந்திரா - 1960, கர்நாடகா - 1965, மகாராஷ்டிரா - 1967, மேற்கு வங்கம் - 1979, மணிப்பூர் - 1988, கேரளம் - 1989 என அடுத்தடுத்த ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டன. இன்னும் கல்வியில் பின்தங்கிய மாநிலமாக உள்ள சில மாநிலங்களான குஜராத் - 2000, உத்தரபிரதேசம் - 2005, பீகார் - 2007, அருணாசல பிரதேசம் - 2009ம் ஆண்டுகளில் இந்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளன.

* அறிவியல் ஆர்வலர்களுக்கு தொழில்நுட்ப மையங்கள்

தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பொதுமக்களிடம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பரப்புதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அறிவியல் அறிவை மேம்படுத்தவும் ஆய்வில் ஈடுபடுவோர் பலன் பெறும் வகையிலும் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்களுக்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட அறிவியல் தொழில் நுட்ப மையங்கள் வருமாறு:

* சட்டங்கள் மற்றும் நடைமுறைகள்

தமிழ்நாட்டில் முதன் முதலாக பொது நூலகங்களை நிறுவுவதற்கும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் நூலகச் சேவையை ஒருங்கிணைப்பதற்கும் தமிழ்நாடு பொது நூலகச் சட்டம், 1948 இயற்றப்பட்டது. பின்னர், 1972ம் ஆண்டு தனி பொது நூலக இயக்கம் உருவாக்கப்பட்டதன் மூலம் நூலக நிர்வாகம் தனித்த அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதன்பிறகு 1982ம் ஆண்டு மே 3ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை மூலம், உள்ளாட்சி நூலக ஆணைய ஊழியர்களின் பணிகளை அரசுப் பணியாக மாற்றும் நடவடிக்கை 1982 ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1996ல் வெளியிடப்பட்ட அரசாணையில், தமிழ்நாட்டில் 625 ஊர்ப்புற நூலகங்களைத் தொடங்க அரசு அனுமதி அளித்தது.