தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். எதிர்பார்த்தது போலவே அடுத்த 5 ஆண்டுகளுக்கான பொதுமக்களுக்கான ஜாக்பாட்டை உள்ளடக்கியதாக திமுக தேர்தல் அறிக்கை காணப்பட்டது. கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட உள்ளது. மகளிர் உரிமைத்தொகை ரூ.2000மாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என முத்தான திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. உயர் கல்விச் சேர்க்கையை அதிகரிக்க, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படி மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய், இனி 1500 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 உயர்த்தப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.1,200 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500ல் இருந்து ரூ.2,500ஆக உயர்த்தப்பட உள்ளது. தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் மாணவ, மாணவிகளுக்கும், விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் தித்திப்பை ஏற்படுத்த கூடியதாகும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படும். அரசு அமைப்புகளில் ஏற்படும் 1.5 லட்சம் காலிப் பணியிடங்கள் காலதாமதமின்றி நிரப்பப்படும் என தேர்தல் அறிவிப்புகள் அரசு ஊழியர்களை குளிர்விக்க தயங்கவில்லை. இளைஞர்களை கவரும் வகையில் புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 2030ம் ஆண்டிற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள், நகரங்களில் தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்ப பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.
திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் மாநகராட்சிகளின் அருகில் நவீன உலகத்தர வசதிகளுடன் புதிய நகரங்கள் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு நகரில் பெருகி வரும் நெருக்கடிகளை குறைக்க உதவும். கடலூர், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சேலம், திருப்பூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள், தமிழ்நாட்டில் 10 கைத்தறி பூங்காக்கள் என அனைத்து பகுதி மக்களையும் இந்த தேர்தல் அறிக்கையானது கவர்வதாக உள்ளது.
இவை எல்லாவற்றையும் விட இல்லத்தரசிகள் தங்களது வீட்டுக்குத் தேவையான வாஷிங் மிஷின், டி.வி., கிரைண்டர், பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவோ அல்லது ஏற்கனவே பயன்படுத்திவரும் இத்தகைய பொருட்களுக்கு மாற்றாக வாங்கவோ ‘இல்லத்தரசி’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுத்திட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்கிற அறிவிப்பு மகளிரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையானது தேர்தல் களத்தில் பேசுபொருளாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.
