Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

திமுக ஆட்சியின் திட்டங்கள் மீது ஸ்டிக்கரை ஒட்டியுள்ளது தவெக: எதிர்கட்சி தலைவர் உதயநிதி விமர்சனம்

சென்னை: தவெக அரசு நேற்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் நிருபர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: இந்த அரசு அமைந்து, கிட்டத்தட்ட 100 நாட்கள் ஆகிவிட்டன. 100 நாட்களில் இந்த அரசின் மார்க் என்ன என்று யாரை கேட்டாலும், பூஜ்ஜியம் என்றுதான் சொல்வார்கள். இந்த பட்ஜெட்டும் இன்றைக்கு ஒரு மிகப்பெரிய பூஜ்ஜியம்.

நிறைய தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறீர்கள். அதை உடனடியாக உங்களால் செய்ய முடியாது. ஆனால், எப்போது செய்யப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள் என தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தோம். திமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களின் மீது புது ஸ்டிக்கர் ஒட்டியதை தவிர வேறு எதையும் புதிதாக தவெக அரசு செய்யவில்லை. தேர்தல் வாக்குறுதியில் தமிழ்நாட்டில் பிறக்கக்கூடிய அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் என்று சொன்னார்.

ஆனால், இன்றைக்குப் பட்ஜெட்டில் அரசு மருத்துவமனையில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு மட்டும்தான் என்று அறிவித்திருக்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் திட்டம், ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உள்ளிட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றியுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு திமுக ஆட்சியில் ரூ.48,500 கோடி. இப்போது அதைக் குறைத்து ரூ.44,500 கோடி தான் இந்த முறை ஒதுக்கியிருக்கிறார்கள்.

மேகதாது அணை கட்டும் கர்நாடகாவைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்த ஆட்சிக்கு வக்கும் தைரியமும் இல்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளையெல்லாம் நாங்கள் பேசினோம். அதற்காக நேற்று என் வீட்டிற்குள் புகுந்து கைது செய்தார்கள். வரவுசெலவுத் திட்டத்தைப் பற்றி நாங்கள் எதுவும் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்று கவனத்தைத் திசை திருப்பும் உத்தியாக விவசாயிகளுடைய சிக்கலைத் திசை திருப்ப வேண்டும் என்று நேற்று அந்த நாடகத்தை நடத்தினார்கள்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டார். இந்த பட்ஜெட்டில் அதையாவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அதைச் சொல்வதற்குக்கூட அவர்களுக்கு நேரமில்லை. கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைப் பற்றி அவர்கள் பேசவே இல்லை. ரூ.2,500 உயர்த்தி கொடுப்போம் என்று சொன்னார்கள். அது பற்றி இந்த பட்ஜெட்டில் அவர்கள் பேசவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* திமுக அரசின் சாதனை

நிதி அமைச்சர் பேசும்போதும் இந்தியாவிலேயே நம் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது என்று மிகவும் மகிழ்ச்சியாகப் பெருமையோடு சொல்கிறார். திமுகவின் சாதனைகளையெல்லாம் இப்போதாவது ஒப்புக்கொண்டார் என்பதற்கு நாங்கள் எங்களின் நன்றியை இந்த அரசுக்கும், நிதி அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

* முதல்வருக்கு முன்ஜாமீன்

முதலமைச்சருக்குப் பதிலாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்று ஒரு முதலமைச்சருக்கு முன்ஜாமீன் வாங்குகிறார். இந்த மாதிரி ஒரு நகைச்சுவையை இந்திய ஜனநாயகம் எந்த மாநிலத்திலும், எந்தச் சட்டமன்றத்திலும் பார்த்திருக்காது.

இதற்கு அவை முன்னவர் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனப் பேசியுள்ளார்கள். எதிர்க்கட்சிகள் ஏதாவது கேள்வி கேட்டால் அதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையாம், இவர்கள்தான் பதில் சொல்வார்களாம். இதற்கு எதற்கு முதலமைச்சர் அவைக்கு வர வேண்டும், இதற்கு எதற்கு நாங்களெல்லாம் அவைக்கு வர வேண்டும் என்றார்.

* திமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய தவெக அரசு

தமிழக அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டுமே செய்துள்ளனர். குறிப்பாக திமுக கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி ‘வெற்றி’ என்று சேர்த்து மாற்றம் செய்துள்ளனர்.

திமுக அரசின் திட்டம் - தவெக அரசு மாற்றிய பெயர்

* உலகம் உங்கள் கையில் - வெற்றி மடிக்கணினி திட்டம்

* கலைஞரின் கனவு இல்லம் - வெற்றி வீடு திட்டம்

* VB-G-RAM-G துணை திட்டம் - வெற்றி 150

* நான் முதல்வன் - வெற்றி திறன் பயிற்சி.

* ஆடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு ஊக்குவிப்பு திட்டம் - வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்

* சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்- வெற்றி தொழில் முனைவோர் திட்டம்

* கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்- மகளிர் உரிமை தொகை திட்டம்

* மாதிரிப்பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் - பெருந்தலைவர் காமராசர் சிறப்பு பள்ளி

* முதல்வர் படைப்பகம் - டிஜிட்டல் நூலகம்

* அன்புச்சோலை திட்டம் - மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள்

* முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் - பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டம்

* நள்ளிலம் மகளிர் நில உடைமை திட்டம் - மண்ணின் திட்டம்

* விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் - நவீன மிதிவண்டி திட்டம்

* தாலிக்கு தங்கம் திட்டம் - அண்ணன் சீர் திட்டம்

* அன்பழகனார் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம் - பள்ளி நிறைவுத் திட்டம்

* ஒலிம்பிக் அகாடமி - ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்

* சுய உதவிக்குழு கடன் திட்டம் - சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்