Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்படும் திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்: கருத்து கேட்புக் கூட்டத்தில் கனிமொழி பேச்சு

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்படும், திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்து கேட்புக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார். திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. குழுவின் தலைவரான கனிமொழி எம்.பி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, டி.கே.எஸ்.இளங்கோவன், டாக்டர்.எழிலன் எம்எல்ஏ மற்றும் தேர்தல் தயாரிப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை, ஆதிதிராவிடர் மகாஜனசபை, அனைத்து முதலியார் வேளார் சங்கங்களின் பேரவை, இளைஞர் படுகர் சங்கம், மக்கள் மறுமலர்ச்சி கழகம், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் உள்ளிட்ட சமுதாய பிரதிநிதிகள், வணிகர்கள், மீனவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து, மனுக்களையும் அளித்தனர். கூட்டத்தில், கனிமொழி எம்.பி. பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக, மண்டலங்கள் தோறும் சென்று அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து, கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறோம்.

இதன் மூலம், திமுக தேர்தல் அறிக்கையை மக்களின் தேர்தல் அறிக்கையாக உருவாக்கும் வேலைகளைச் செய்து வருகிறோம். இதன் மூலம் திமுகவின் தேர்தல் அறிக்கையானது மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருக்கும். நாங்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, இன்று சென்னையில் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இங்கு வந்திருக்கும் உங்களுடைய கருத்துக்களை விரிவாகக் கேட்டறிய, இந்தக் குழு 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உங்களுடன் கலந்துரையாடும். உங்களுடைய கருத்துக்களை நீங்கள் விளக்கமாக எங்களிடம் தெரிவிக்க வேண்டும்.

நீங்கள் எழுதிக் கொண்டு வந்திருக்கும் கருத்துக்களையும் எங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். எங்களால் செயல்படுத்தக்கூடிய, சாத்தியமான அனைத்துக் கருத்துக்களையும் நாங்கள் நிச்சயமாக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, வரவிருக்கும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.