காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அடுத்த புதுவயலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வலிமையாக, உறுதியாக உள்ளது. அதனை யாரும் உடைக்க முடியாது. கலைக்க முடியாது. அடுத்த தேர்தலிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். அதில் சந்தேகம் வேண்டாம். ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும்.
அரசியல் சாசனத்தை திருத்தாமல் அதைப்போன்று ஒரு சட்டம் நிறைவேற்ற முடியாது. இதனை திருத்த ஒவ்வொரு அவையிலும் அதாவது, மக்களவை, மாநிலங்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். பாஜகவிற்கு மக்களவையிலும் பெரும்பான்மை இல்லை. மாநிலங்களவையிலும் பெரும்பான்மை இல்லை. அரசியல் சாசனத்தை திருத்தும் சட்ட மசோதவை கொண்டுவந்தால் அதை நிச்சயம் நாங்கள் தோற்கடிப்போம். ஒரேநாடு ஒரே தேர்தல் நடைபெறாது. இவ்வாறு கூறினார். பேட்டியின் போது எம்எல்ஏ மாங்குடி உள்பட பலர் உடன் இருந்தனர்.


