சென்னை: திமுக மறுசீரமைப்பு குழுவினருடன் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திமுக மறுசீரமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, சார்பு அணிகளின் மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவாக ஆராயும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தொகுதி மறு மறுசீரமைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சக்கரபாணி, கீதாஜீவன், தமிழரசி ரவிக்குமார், எஸ்.கே.பி.கருணா பங்கேற்றனர். இந்த குழுவினர் சிறுபான்மை நலப்பிரிவு மற்றும் வர்த்தகர் அணி உடனான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு அணிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். தொடர்ந்து திமுக மறுசீரமைப்பு குழுவினர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது கட்சியின் மாவட்ட கட்டமைப்பு, திமுக அணிகளின் மறுசீரமைப்பு குறித்தும் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் பல்வேறு அறிவுரைகளையும் மறுசீரமைப்பு குழுவினருக்கு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.


