திமுக ஆட்சியில் கட்டப்பட்ட செங்குன்றம் பஸ் நிலைய பணிகளை தவெக அரசு கிடப்பில் போடலாமா..? பொதுமக்கள் வேதனை
புழல்: சென்னை செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை வள்ளலார் நகர், பாரிமுனை, கோயம்பேடு, கிண்டி, தாம்பரம், அம்பத்தூர், பூந்தமல்லி, திருவள்ளூர், திருவொற்றியூர், பழவேற்காடு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நூற்றுக்கு மேற்பட்ட சென்னை மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து நிலையத்தில் நிழற்குடை இல்லாததால் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மழை, வெயில் காலங்களில் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் வைத்து கோரிக்கையையடுத்து, கடந்த திமுக ஆட்சியில் செங்குன்றம் பேரூராட்சி சார்பில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை அமைக்க பூமி பூஜை கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி பேருந்து நிலைய வளாகத்தில் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி சார்பில் கூடுதல் நிதியாக 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுவந்தது.
இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கடந்த 4 மாதமாக கட்டுமான பணிகள் முடங்கியுள்ளது. இதனால் இங்கு வரவேண்டிய பேருந்துகள் அனைத்தும் அருகில் உள்ள ஜிஎன்டி சாலையின் இரண்டுபுறமும் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மந்தகதியில் நடைபெற்றுவரும் பேருந்து நிலைய வளாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘’செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவள்ளூர் கூட்டுச்சாலை நேதாஜி சிலை வரை உள்ள ஜிஎன்டி சாலையில் இரண்டு பக்கங்களிலும் மாநகர பேருந்துகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மற்ற வாகனங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. செங்குன்றம் போக்குவரத்து துறை சார்பில், பல பேருந்துகளுக்கு அபராத விதிக்கப்பட்டு வருகிற சூழ்நிலையில் மீண்டும், மீண்டும் மாநகர போக்குவரத்து ஓட்டுநர்கள் மீண்டும் சாலை விதிமுறைகளை மீறி சாலைகளின் 2 பக்கங்களிலும் நிறுத்திவிடுகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாநகரப் பேருந்துகளை புழல் ஏரி மதகு அருகே உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



