சென்னை: கோவளத்தில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மாமல்லன் நீர்த்தேக்க திட்டப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை புறநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டப் பணிகளைத் தவெக அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் இத்திட்டத்திற்காகச் சுமார் ரூ.342 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
குறிப்பாக, சென்னை புறநகர்ப் பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே இந்தத் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன்படி, இத்திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக 15 சதவீதப் பணிகள் தற்போது வரை நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மாமல்லன் நீர்த்தேக்கப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது.
இதன் காரணமாகக் கடந்த 1 வாரமாகக் கரை அமைக்கும் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்தத் திட்டத்தின் வடிவமைப்பைப் பல்வேறு பணிகளுடன் ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைத்துள்ளதாகவும், அந்தக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே தமிழக அரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்குக் குடிநீர் வழங்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தையும் தற்போது ஆய்வு என்ற பெயரில் நிறுத்தி வைப்பதற்கான உத்தரவைத் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.



