தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்: சென்னை தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டையில் ஜவுளி விற்பனை களைகட்டியது
* வெளியூர்களுக்கு செல்ல கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை: அரசு, தனியார் பஸ்களில் முன்பதிவு மும்முரம்
சென்னை: தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளதாலும், நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் தீபாவளி பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் நேற்று காலையில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை வருகிற 8ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தீபாவளி பொருட்கள் வாங்க நேற்று காலை முதல் கடை வீதிகளில் திரள தொடங்கினர்.
சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் என்பது சற்று குறைவாக இருந்து வருகிறது. இதனால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடை வீதிகளில் தீபாவளி விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் பொருட்கள் வாங்குவதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொருட்களை வாங்க மக்கள் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர். இதனால் வர்த்தக பகுதியான சென்னை தியாகராயநகர், பழைய வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பிராட்வே, மயிலாப்பூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் நேற்று காலை நேரத்திலேயே வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு தேவையான துணிமணிகளை வாங்கி சென்றனர்.
மாலை 3 மணிக்கு மேல் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் தி.நகர் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் வெள்ளத்தில் குலுங்கியது. அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள சாலையோரம் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் தீபாவளி பர்சேஸில் மும்முரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு துணிகடைகள் முன்பாக மக்கள் கூட்டம் வெள்ளமாக காட்சியளித்தது.
குறிப்பாக தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள் அதிக அளவில் புதிய துணிகளை வாங்கிய காட்சியை காண முடிந்தது. அதே நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் பாதுகாப்பு மற்றும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை தடுக்க தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளதால் வரும் நாட்களில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால், இறுதிக்கட்ட தீபாவளி பர்சேஸ்ஸை சமாளிக்கும் வகையில் கடைகளை சீக்கிரம் திறக்கவும் கடைக்காரர்கள் முடிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையில் புத்தாடைகளுக்கு பிறகு மக்கள் மனதில் இடம் பிடிப்பது பட்டாசும், சுவிட்டும் தான். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் பட்டாசுகளை வெடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தீவுத்திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அது மட்டுமல்லாமல் தெருக்களிலும் புதிதாக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் நண்பர்கள், விருந்தினர்களுக்கு சுவிட் வழங்குவதற்காக சுவிட் கடைகளில் பொதுமக்கள் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதனால் அனைத்து சுவிட் கடைகளில் கடந்த சில நாட்களாக ஆர்டர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.
பஸ், ரயில் ஹவுஸ் புல்: சென்னையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சார்ந்தவர்கள், கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், அவர்கள் ரயில்களில் முன்பதிவு தொடங்கிய அன்றே முன்பதிவு செய்ய தொடங்கினர்.
இதனால், சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல்லாகியுள்ளது. அனைத்து ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் அதிக அளவில் இருந்து வருகிறது. மேற்கொண்டு டிக்கெட் புக் செய்ய முடியாத அளவுக்கு தான் ஒவ்வொரு ரயிலின் முன்பதிவு நிலை இருந்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதனால், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக அனைத்து ரயில்களிலும் இடம் இல்லாத நிலை இருந்து வருகிறது. சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் இல்லாத நிலை தான் தற்போது நீடித்து வருகிறது. இதனால், தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவும், தீபாவளிக்கு பின்பாகவும் சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடையே எழும்பியுள்ளது.
மேலும் அனைத்து பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு என்பது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை ஊருக்கு செல்வதற்கான அனைத்து பஸ்களிலும் டிக்கெட் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், அரசு சார்பில் மேலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை அனைவருக்கும் விடுமுறையாகும். இதனால், தீபாவளி பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடை வீதிகளில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* சென்னையை பொறுத்தவரை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடை வீதிகளில் தீபாவளி விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
* பக்கத்து மாநிலமான ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொருட்களை வாங்க மக்கள் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர்.


