தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பட்டாசு வணிகத்தை முறைப்படுத்த வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்ெசயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மொத்தம் மற்றும் சில்லறை உரிமம் பெற்று சுமார் 15,000 வணிகர்கள் பட்டாசு வணிகம் செய்து வருகிறார்கள். மிகப்பெரிய வேலைவாய்ப்புமிக்க தொழிலாகவும், தமிழக அரசுக்கு வருவாய் வழங்கும் தொழிலாகவும் பட்டாசு வியாபாரம் உள்ளது. மேலும் பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதால் உரிமம் பெறுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே கடந்த வருடத்தில் அமைத்துக் கொடுத்தது போல் விண்ணப்பத்தை நேரில் அளிப்பதற்கு பரிசீலனை செய்ய வேண்டும்.
காலியாக உள்ள மைதானத்தில் சட்டத்திற்கு உட்பட்டு தற்காலிக ஷெட் வசதி அமைக்கவும் அனுமதி அளிக்க வேண்டும். தீபாவளி பண்டிகை மிகவும் நெருக்கமாக இருக்கிற காரணத்தினால் காலதாமதமின்றி உடனடியாக உரிமங்களை வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் நிரந்தர உரிமத்தை புதுப்பிப்பது தொடர்பான மற்றும் தற்காலிக உரிமம் ஒரே மாதிரியான கோட்பாடு கடைப்பிடிக்க உரிய அறிவுறுத்தல் இருக்குமாயின் உரிமங்கள் காலதாமதமின்றி உடனடியாக கிடைப்பதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்.