சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக இன்று முதல் 7ம் தேதி வரை 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன்படி 3 நாட்களிலும் சேர்த்து மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்படும்.
பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்காக நவம்பர் 9, 10-ம் தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் 4,382 பேருந்துகளுடன் கூடுதலாக 6,815 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மொத்தம் 11,197 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் மறைமலை நகர் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும்.
கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், கோவை உள்ளிட்ட ஊர்களுக்கும், தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் முன்பதிவு செய்வதற்காக கிளாம்பாக்கத்தில் 10, கோயம்பேட்டில் 2, மறைமலை நகரில் 2 என மொத்தம் 14 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
TNSTC செயலி மற்றும் www.tnstc.in இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். திருவான்மியூர், ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், அடையாறு, பிராட்வே, எழும்பூர், அம்பத்தூர், கிண்டி, பூந்தமல்லி உள்ளிட்ட 16 இடங்களில் இருந்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு நேரடி பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் தொடர்பான புகார்களுக்கு 94450 14436, கட்டணமில்லா எண் 149 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 93848 08333 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம். பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு வழிகாட்ட தகவல் மையங்கள், மின்னணு தகவல் பலகைகள், ஒலிபெருக்கி அறிவிப்புகள் மற்றும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும்.
கிளாம்பாக்கத்தில் இருந்து மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு கட்டணமில்லா இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு 24 மணி நேரமும் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், கூடுதல் புறநகர் மின்சார ரயில்களை இயக்கவும், கோவை, தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்கவும் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சொந்த வாகனங்களில் ஊர்களுக்குச் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாகச் செல்வதைத் தவிர்த்து, ஓஎம்ஆர் சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
* சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
* பயணிகள் முன்பதிவு செய்வதற்காக கிளாம்பாக்கத்தில் 10, கோயம்பேட்டில் 2, மறைமலை நகரில் 2 என மொத்தம் 14 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.


