Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தீபாவளிக்கு மறுநாள் பாதிக்கு பாதி ஆபர் ஈரோடு ஜவுளி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: அதிகாலை முதலே விற்பனை படுஜோர்

ஈரோடு: ஜவுளிக்கு பிரசித்தி பெற்ற ஈரோடு நகரில், தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 வாரங்களாக ஜவுளி விற்பனை அதிகளவில் நடைபெற்றது. ஈரோடு மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து தீபாவளிக்கு புத்தாடைகளை எடுத்துச் சென்றனர். அதேபோல வெளிமாநில வியாபாரிகளும் ஈரோடு வந்து ஜவுளி கொள்முதல் செய்து சென்றனர். தீபாவளி நாளான நேற்று முன்தினமும் ஜவுளிக்கடைகள் அதிக அளவில் இருக்கும் ஆர்.கே.வி. ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி விற்பனை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நள்ளிரவு விற்பனை முடிவடைந்ததையடுத்து, தீபாவளிக்கு மறுநாளான நேற்றும் பெரும்பாலான ஜவுளிக்கடைகளில் தள்ளுபடி விலையில் ஜவுளி ரகங்கள் விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்பேரில், நேற்று அதிகாலை 3 மணி முதல் ஆர்.கே.வி. ரோட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக் கடைகளில், ரகங்களை பொறுத்து 50 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டது. இதனால், ஜவுளி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆண்டுதோறும், இரண்டொரு பெரிய ஜவுளி நிறுவனங்கள் மட்டும் ஸ்டாக் கிளியரன்ஸ் செய்வதற்காக தீபாவளிக்கு அடுத்த நாள் தள்ளுபடி விற்பனை செய்து வந்தனர். ஆனால், இந்த வருடம் அனைத்து ஜவுளிக்கடைகளிலும் தள்ளுபடி விற்பனை அறிவிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த தள்ளுபடி விற்பனை காரணமாக குவிந்த பொதுமக்கள் கூட்டத்தால் ஈரோடு மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க், கச்சேரி வீதி, ஆர்.கே.வி.ரோடு, காவிரி ரோடு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும், போலீசார் மற்றும் மாவட்டக் காவல் அலுவலக அதி விரைவுப் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.