Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகைக்கு இன்று பயணம் செய்யும் மக்கள் பஸ், ரயில்கள் கிடைக்காமல் திண்டாட்டம்: தமிழகம் முழுவதும் துணிகள் வாங்க அலைமோதிய கூட்டம்: இனிப்பு, பட்டாசு விற்பனையும் களை கட்ட தொடங்கியது

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் துணிகள் வாங்க இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பஸ், ரயில்களில் செல்ல தயாராகி வருகின்றனர். இதே போல ஜவுளி, பட்டாசு விற்பனையும் களை கட்ட தொடங்கியுள்ளது. நாளை சொந்த ஊர் செல்ல டிக்கெட் கிடைக்காததால் இன்றே பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்லத் தொடங்கியுள்ளதால், கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன.

தீபாவளி பண்டிகை வருகிற 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள்-விருந்தினர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் தீபாவளி ‘பர்சேஸ்’ செய்வதை ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கினர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தீபாவளி பொருட்கள் விற்பனை மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் தீபாவளி விற்பனை களை கட்டி காணப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை கடந்த ஒரு மாதமாகவே கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், இறுதிக்கட்ட விற்பனை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் விறுவிறுப்பு அடைந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை முக்கிய வணிக பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக சென்னை மட்டுமல்லாமல் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் சென்னையை நோக்கி படையெடுத்த காட்சியை காண முடிந்தது. அவர்கள் குடும்பத்துடன் வந்து துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.

அதே போல சாலையோர கடைகளில் அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்றையும் வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால், இந்த கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. மாலை நேரத்தில் இந்த கூட்டம் மேலும் பல மடங்கு உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் சென்னையில் தங்கி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் இங்கு தங்கி தங்கள் மேல்படிப்பையும் தொடர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமானோர் அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட விஷேச தினங்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் வருகிற 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனால் முன்பதிவு தொடங்கிய, 60 நாட்களுக்கு முன்பே, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஒவ்வொரு ரயில்களிலும் 200க்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வருகின்றனர். பல ரயில்களில் மேற்கொண்டு டிக்கெட் எடுக்க முடியாத அளவுக்கு ‘‘ரெக்கரட்” நிலை இருந்து வருகிறது. பண்டிகைக்கு முன்னரும், பின்னரும் அனைத்து ரயில்களிலும் இதே நிலை தான் நீடித்து வருகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் திங்கட்கிழமை தமிழக அரசு சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், தீபாவளியை உற்சாமாக கொண்டாடும் வகையில் இன்று மாலை முதல் மக்கள் சென்னையில் இருந்து புறப்பட தயாராகி வருகின்றனர். இதனால், இன்று மாலை முதல் சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல் ஆகியுள்ளது. ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே போலீசார், ஆர்பிஎப் போலீசார் செய்துள்ளனர்.

மேலும் முன்பதிவில்லா பெட்டியில் மக்கள் நெரிசல் இல்லாமல் செல்லும் வகையில் பயணிகளை ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்று செல்லும் வகையில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் நாளை, நாளை மறுநாள் ரயில் நிலையங்களில் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் போக்குவரத்துறை சார்பில் இன்று முதல் 7ம் தேதி வரை வழக்கமாக இயக்கக்கூடிய 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9 ஆயிரத்து 86 சிறப்பு பேருந்துகள்(அதில், ஆயிரத்து 659 தனியார் ஒப்பந்த பேருந்துகள் அடங்கும்) என 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 15 ஆயிரத்து 659 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோன்று, தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், வருகிற 9ம் தேதி மற்றும் 10ம் தேதிகளில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கக்கூடிய 4 ஆயிரத்து 382 பேருந்துகளுடன் கூடுதலாக 6,815 சிறப்பு பேருந்துகள் (அதில், ஆயிரத்து 241 தனியார் ஒப்பந்த பேருந்துகள் அடங்கும்) என 2 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 11 ஆயிரத்து 197 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதேபோன்று, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஆனாலும் திருநெல்வேலிக்கு செல்ல ரூ.2500 கட்டணம் அறிவித்துள்ளனர். கோவைக்கு ரூ.2400 அறிவித்துள்ளனர். ஆனால் டிமாண்ட் காரணமாக ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4500 வரை வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்தக் கட்டணம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை டிக்கெட் கிடைக்காததால் இன்றே பலரும் ஊருக்குச் செல்வதால் இன்றும் பஸ், ரயில்களில் கூட்டம் அலை மோதுகிறது. அதேநேரத்தில் விமானக் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. அதேபோல தீபாவளி முடிந்து திங்கள்கிழமை சென்னை திரும்புவதற்கும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் இந்த தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலைதான் தற்போது உருவாகியுள்ளது.

மேலும், சென்னை தீவுத்திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிகமாகவும் தெருக்களில் வியாபாரிகள் பட்டாசு கடைகளை அமைத்துள்ளனர். இங்கு மக்கள் பட்டாசுகளை வாங்கவும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் சுவிட் கடைகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது.