தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் மந்தமான விற்பனை: வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால் வியாபாரிகள் கவலை!
சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 8ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடைகள் வாங்குவது முக்கியமான நிகழ்வாக இருப்பதால், புத்தாடைகள் வாங்குவதற்காகப் பொதுமக்கள் கடைவீதிகளுக்குப் படையெடுப்பது வழக்கம்.
சென்னையின் முக்கிய வணிகப் பகுதிகளில் ஒன்றான பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் ஏராளமான ஜவுளிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து புத்தாடைகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், எம்.சி. சாலையில் எதிர்பார்த்த அளவிற்குப் பொதுமக்கள் வருகை இல்லை. இதனால் வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாகப் பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதே வாடிக்கையாளர்கள் வருகை குறைவதற்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக தீபாவளி நேரங்களில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்தப் பகுதியில், தற்போது சுமார் 600 முதல் 700 பேர் மட்டுமே வருகை தருவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஜவுளி விற்பனையும் கணிசமாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பொதுமக்கள் அதிக அளவில் வருகை தந்து புத்தாடைகளை வாங்குவார்கள் என்றும், அதன் மூலம் வியாபாரம் அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். மேலும், தற்போது மழை இல்லாததால் ஓரளவிற்காவது வியாபாரம் நடைபெற்று வருவதாகவும், மழை பெய்தால் அதுவும் பாதிக்கப்படும் என்றும் சிறு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, புத்தாடைகள் வாங்குவதற்காகப் பொதுமக்கள் குடும்பத்துடன், குறிப்பாகக் குழந்தைகளுடன் வருகை தருவதால், அப்பகுதியில் போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஒலிபெருக்கிகள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களுடன் கொண்டு வரும் உடைமைகள், நகைகள் மற்றும் பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வரும் நாட்களிலாவது வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்து விற்பனை சூடுபிடிக்குமா என்ற எதிர்பார்ப்பில் வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.


