தீபாவளி என்றாலே இனிப்புப் பெட்டி, உலர் பழங்கள், ஆடைகள் என வழக்கமான பரிசுகள்தான் நினைவுக்கு வரும். இந்த முறை பரிசு பெறுபவரை ஆச்சரியப்படுத்தும் வகையில், அவருக்குப் பயன்படக்கூடிய அல்லது நீண்ட காலம் நினைவில் நிற்கக்கூடிய அன்பளிப்புகளைத் தேர்வு செய்யலாமே. இதோ சில டிப்ஸ்.
போட்டோ புக்
குடும்பப் புகைப்படங்கள், நண்பர்களுடன் எடுத்த படங்கள், மறக்க முடியாத தருணங்கள் எனத் தொகுத்துப் புகைப்படப் புத்தகமாக வழங்கலாம். பிறந்தநாள், திருமணம் அல்லது நட்பின் நினைவுகளைச் சேமிக்க இது தனித்துவமான பரிசு.
பெயர் பொறிக்கப்பட்ட அகல் விளக்கு
பரிசு பெறுபவரின் பெயர் அல்லது குடும்பப் பெயர் பொறிக்கப்பட்ட பித்தளை விளக்கை வழங்கலாம். ஒவ்வொரு தீபாவளியிலும் பயன்படுத்தக்கூடிய நினைவுப் பரிசாக இருக்கும். ஒரு காலத்தில் வீட்டில் எந்தப் பாத்திரம் வாங்கினாலும் அதில் பெயர் பொறித்து வாங்குவர். அந்த ரெட்ரோ நினைவுகளையும் கொடுக்கும்.
தேநீர் விரும்பிகளுக்கான கிஃப்ட் பாக்ஸ்
பலவகை தேயிலைகள், அழகான தேநீர்க் கோப்பை, தேநீர் வடிகட்டி ஆகியவற்றைச் சேர்த்துப் பரிசளிக்கலாம். வழக்கமான இனிப்புப் பெட்டியிலிருந்து மாறுபட்ட, தினமும் பயன்படுத்தக்கூடிய பரிசு இது. வேண்டுமானால் ஹெர்பல் தேநீர் தொகுப்புகள் கூட இன்னும் சிறப்பாக இருக்கும்.
மினி கார்டனிங் கிட்
சிறிய தொட்டிகள், விதைகள், மண் கலவை, தோட்டக்கலைக் கருவிகள் ஆகியவற்றைக் கொண்ட தொகுப்பைப் பரிசளிக்கலாம். வீட்டில் செடிகள் வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்றது.
கையால் எழுதிய கடிதம் மற்றும் நினைவுப் பெட்டி
ஒரு சிறிய கடிதம், புகைப்படம், பிடித்த சாக்லேட், தனிப்பட்ட நினைவுப் பொருள் ஆகியவற்றை அழகான பெட்டியில் வைத்து வழங்கலாம். விலையைவிட உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பரிசு இது.
சுயபராமரிப்பு அன்பளிப்புத் தொகுப்பு
குளியல் சால்ட், மாய்ஸ்ச்சரைசர், வாசனை மெழுகுவர்த்தி, மென்மையான துண்டு ஆகியவற்றை இணைத்துப் பரிசளிக்கலாம். ஓய்வெடுக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. சரும ஒவ்வாமையை ஏற்படுத்தாத பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும்.
பெயர் பொறித்த ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்
பெயர் பொறிக்கப்பட்ட தரமான தண்ணீர் பாட்டில் அல்லது வெப்பத்தைத் தக்கவைக்கும் தெர்மா பாட்டில்கள் வழங்கலாம். அலுவலகம், பயணம், உடற்பயிற்சி எனப் பல இடங்களிலும் பயன்படும்.
தனித்துவமான சாக்லேட் தொகுப்பு
வழக்கமான இனிப்புகளுக்குப் பதிலாக, நட்ஸ், உலர் பழங்கள், டார்க் சாக்லேட் போன்றவற்றைக் கொண்ட ஹோம் மேட் சாக்லேட் பெட்டியைத் தேர்வு செய்யலாம். சாக்லேட் விரும்பிகளுக்கு இது சிறந்த தேர்வு.
இசைப் பிரியர்களுக்கான பரிசு
சிறிய ப்ளூடூத் ஸ்பீக்கர், வயர்லெஸ் இயர்பட்ஸ், ஹெட் போன் அல்லது தங்களுக்குப் பிடித்த பாடல்களின் பட்டியலைக் கொண்ட தனிப்பட்ட இசைப் பரிந்துரைக் குறிப்பை வழங்கலாம். இசையை விரும்புபவர்களுக்கு ஏற்றது.
அனுபவத்தைப் பரிசளியுங்கள்
உணவக வவுச்சர், கலைப் பயிற்சி வகுப்பு, மட்பாண்டம் செய்யும் பயிற்சி, ஸ்பா அனுபவம் அல்லது ஒரு நாள் சுற்றுலா போன்றவற்றைப் பரிசளிக்கலாம். பொருட்களைவிட அனுபவங்களை விரும்புபவர்களுக்கு இது வித்தியாசமான தேர்வு.
- என். நிஷா


