விவாகரத்து தர மறுத்ததால் ஆத்திரம்; மனைவியை டிரைவர் மூலம் தீர்த்துக்கட்டிய அதிமுக நிர்வாகி அதிரடி கைது
கோவை: கோவை அருகே நடந்த பெண் கொலையில் திடீர் திருப்பமாக கார் டிரைவர் வாக்குமூலத்தால் அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம் துடியலூர் பன்னிமடை அருகே உள்ள தாளியூரை சேர்ந்தவர் கவிசரவணக்குமார் (51) என்கிற கவி சரவணன். இவரது மனைவி மகேஸ்வரி (46). தம்பதிக்கு சஞ்சய் (19) என்ற மகனும், நேத்ரா (15) என்ற மகளும் உள்ளனர். சஞ்சய் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேத்ரா 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மகேஸ்வரியை பிரிந்த கவிசரவணக்குமார் கோவை வடவள்ளி பகுதியில் தனியாக ஒரு வீட்டில் தங்கி இருந்தார்.
அதிமுக பிரமுகரான இவர் பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவராகவும், முன்னாள் மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி வீட்டில் தனியாக இருந்த இவரது மனைவி மகேஸ்வரியை கார் டிரைவர் சுரேஷ் (49) என்பவர் குத்திக்கொலை செய்தார். தொடர்ந்து அவர் வடவள்ளி போலீசில் சரணடைந்தார். கொலை நடந்த இடம் தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் தடாகம் போலீசார் கார் டிரைவர் சுரேசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கவிசரவணக்குமார் என்பவரிடம் கடந்த 15 வருடங்களாக கார் டிரைவராக தான் வேலை பார்த்து வருவதாகவும், கவிசரவணக்குமார் 5 வருடங்களாக மனைவி மகேஸ்வரியை பிரிந்து தடாகம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும், இதனால் தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும் கூறினார்.
கடந்த 28ம் தேதி காலை சுமார் 9.15 மணிக்கு தாளியூர் வீட்டுக்கு வந்தபோது கருத்து வேறுபாடுகளை மறந்து உங்கள் கணவர் கவி சரவணக்குமாரை அழைத்து பேசும்படி தான் கூறியதாகவும், அப்போது மகேஸ்வரி ஆவேசமாக திட்டியதால் ஆத்திரம் அடைந்து போர்டிகோ டிராயரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் குத்திக்கொலை செய்ததாகவும் சுரேஷ் வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கொலை வழக்கில் மத்திய சிறையில் இருந்த சுரேஷை தடாகம் போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து மகேஸ்வரி கொலை குறித்து விசாரித்தனர். அப்போது கவிசரவணக்குமாரின் மனைவி மகேஸ்வரி விவாகரத்து தர மறுத்து வருவதால், சுரேஷை அழைத்த கவிசரவணக்குமார் தனது மனைவி மகேஸ்வரியை கொன்று விடுமாறும், வழக்கு செலவை தான் பார்த்துக் கொள்வதோடு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தனது பெயரில் உள்ள (கவி சேம்பர்) செங்கல் சூளையை எழுதி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து மகேஸ்வரியை கொலை செய்ததாக சுரேஷ் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் கவி சரவணக்குமாரை கைது செய்த போலீசார் மகேஸ்வரி கொலை வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்த்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
