Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ரூ.36 கோடி சொத்து குவிப்பு வழக்கு; விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்: விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து, அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் வருகிற 6ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2021ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி முடியும் வரை சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் பதவி வகித்தார். அவர் பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு செந்தமான புதுக்கோட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள சகோதரர், சகோதரி, உதவியாளர்கள், பினாமிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என 50 இடங்களில் ஒரே நேரத்தில் தனித்தனி குழுக்களாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

குறிப்பாக, விராலிமலை தொகுதியில் உள்ள இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பையா, குபேந்திரன், பாண்டியன் வீடுகள், விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாருக்கு சொந்தமாக இலுப்பூர் அடுத்த மேட்டுச்சேரியில் உள்ள மதர்தெரசா கல்லூரி, இலுப்பூர் நாயுடு தெருவில் உள்ள உதயகுமாரின் உதவியாளர் பாண்டி என்பவரின் வீடு, இலுப்பூரில் அமைச்சருக்கு சொந்தமான ராசி விடுதி, திருவேங்கைவாசலில் உள்ள ராசி மெட்டல்ஸ் கல் குவாரியிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதேபோல் கைக்குறிச்சியில் கல்வி நிறுவனம் நடத்தி வரும் ஆலங்குடி துரை தனசேகரன் வீடு, புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளரான அன்பானந்தம் வீடு, புதுக்கோட்டை சார்லஸ் நகரில் முருகேசன் வீடுகளில் சோதனை நடந்தது. மேலும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான மதர் தெரசா கல்வி அறக்கட்டளைக்கு கீழ் இயங்கி வரும் 14 கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடந்தது.

இந்த சோதனை முடிவில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.23,85,700 ரொக்கம், 4,870 கிராம் கொண்டு 4.87 கிலோ தங்க நகைகள், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள், வழக்கு தொடர்பான 19 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், பல்வேறு வங்கிகளில் உள்ள வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர்கள் விவரங்கள், பினாமிகள் பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனைக்கு முன்பு புகாரின் பெயரில் கிடைத்த ஆவணங்களின்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரூ.27.22 கோடி சொத்து குவித்ததாக 6 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்த போது, மொத்தம் ரூ.35.79 கோடிக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து இருந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் மீது வழக்கு பதிவு செய்து கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில் விஜயபாஸ்கர் சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் சொத்துகள் சேர்த்து இருந்தது உறுதியானது.

அதைதொடர்ந்து அமலாக்கத்துறை வரும் வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. அப்போது வழக்கு தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் நேரில் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். தற்போது விராலிமலை தொகுதியில் தவெக வேட்பாரளாக விஜயபாஸ்கர் போட்டியிட உள்ள நிலையில் அமலாக்கத்துறை ரூ.35.79 கோடி மதிப்பிலான சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் கடந்த 2011, 2016, 2021ல் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கடந்த 2024 மார்ச் 21ம் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மனைவி ரம்யா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
  • லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரூ.27.22 கோடி சொத்து குவித்ததாக 6 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மனைவி ரம்யா மீது வழக்கு பதிவு செய்தனர்.
  • சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, மொத்தம் ரூ.35.79 கோடிக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து இருந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது.