Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசுக்கு ரூ.60 லட்சம் நிதியிழப்பு செய்த ஊராட்சி மன்ற தலைவர்கள் 2 பேர் பதவி நீக்கம்: கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர்: தாமரைப்பாக்கம் பெண் ஊராட்சி மன்ற தலைவர், வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய இருவரும் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு ரூ.60 லட்சம் நிதியிழப்பு செய்ததால் அவர்களை பதவி நீக்கம் செய்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக பெண் ஊராட்சி மன்ற தலைவராக கீதா துளசிராமன் பணியாற்றி வந்தார். ஊராட்சியில் கடந்த 2020 முதல் 2022 ஆண்டு வரை பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும், அதன் மீது தணிக்கை செய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்திருந்தார்.

அந்த மனுவை பெற்ற அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அது தொடர்பாக தணிக்கை செய்து அறிக்கை அளிக்க ஊரக உதவி இயக்குனருக்கு அறிவுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து உதவி இயக்குனர் தாமரைப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக தணிக்கை செய்ய ஆர்.கேபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியை நியமனம் செய்து உத்தரவிட்டிருந்தார். தணிக்கை செய்த அதிகாரி ஊராட்சியில் கட்டிட வரைபடம் அனுமதி வழங்கப்பட்டதிலும், மின்விளக்குகள் உபகரணங்கள் வாங்கியது மற்றும் பழுது நீக்கியதில் முறையான கணக்கு இல்லாதது என ரூ.40 லட்சம் நிதியிழப்பு செய்தது கண்டறியபட்டது.

அதுமட்டுமில்லாமல் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவருக்கான இருக்கையில் அமர்ந்து கணக்கு வழக்குகள் பார்த்தது, கோப்புகளில் கையொப்பமிட்டது, துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் கையொப்பத்தை தீர்மான நகல்களில் போட்டது, குடியரசு சுதந்திர தின விழாவில் பெண் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரே தேசியக்கொடியை ஏற்றியது, புகைப்படங்கள் மூலமாக தணிக்கை அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 - பிரிவு 205 கீழ் ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியருக்கு தணிக்கை செய்த அதிகாரி அறிக்கை அளித்திருந்தார்.

தணிக்கை அதிகாரியால் ஊராட்சியில் கண்டறியப்பட்ட நிதியிழப்பு தொடர்பான ஆவணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற ஆவணங்களை கொண்டு முன்னாள் வார்டு உறுப்பினர் பிரகாஷ் என்பவர் தணிக்கை அதிகாரிகள் அறிக்கை மீது முடிவு எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 4 வாரத்தில் மாவட்ட ஆட்சியர் தணிக்கை அறிக்கை மீது முடிவு எடுத்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

உத்தரவு நகல் வந்து இரு வாரங்களிலேயே அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பணியிட மாற்றத்தில் சென்றதால், அதன் பிறகு வந்த புதிய ஆட்சியர் த.பிரபுசங்கர் நீதிமன்றம் கொடுத்த 4 வார காலக்கெடு முடிந்தும் எந்தவித முடிவும் எடுக்காமல் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்காமல் இருந்து வந்தார். நீதிமன்றம் அறிவித்த காலகேடு முடிந்தும் நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்பாமல் வைத்திருந்ததால் மனுதாரர் ஆட்சியருக்கு தபால் மூலமாக புகார் மனு அளித்திருந்தார். புகார் மனு மீது தற்போது மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண பணியில் இருப்பதால், முடிந்ததும் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்படும் என ஆட்சியர் தரப்பில் மனுதரருக்கு கூறப்பட்டிருந்தது.

ஆனால் நீதிமன்றத்திற்கு 4 வாரத்தில் அனுப்ப வேண்டிய அறிக்கை 10 வாரங்கள் ஆகியும் அனுப்பாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் தாமரைப்பாக்கம் முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர் பிரகாஷ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மணிகண்டன் மூலமாக ஆட்சியருக்கு நேற்று முன்தினம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸை அனுப்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தாமரைபாக்கம் பெண் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு முறைகேடுகள் செய்து அரசுக்கு நிதியிழப்பு செய்ததை தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. மற்றொருவர்: இதேபோல் கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா. அரசுக்கு வரவேண்டிய தொகை ரூ.19 லட்சத்து 42 ஆயிரத்து 171 அரசுக்கு செலுத்தாமல் நிதியிழப்பு செய்ததால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11) வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுனிதாவை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.