சென்னை: பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த குறும்படங்களை எடுக்க மாணவ-மாணவிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலை துணைவேந்தர்கள், கல்லுாரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: காலநிலை மாற்றம், வேகமான நகர வளர்ச்சி காரணமாக, இயற்கை பேரிடர்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, பேரிடர் அபாய தணிப்பு நடவடிக்கைகளில், இளைஞர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்.
மத்திய உள்துறையின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், ‘பேரிடர் அபாய தணிப்பு’ என்ற தலைப்பில், குறும்படம் அல்லது செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ.யால் உருவாக்கப்பட்ட குறும்படம் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. நாடுழுழுதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ,மாணவியர், பேராசிரியர்கள் இடையே தொழில்நுட்ப வசதிகளை கொண்டு படைப்பாற்றலை ஊக்குவிப்பது, பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘இயற்கை பேரிடர் அபாய தணிப்புதயார் நிலை,தடுப்பு நவடிக்கை, மீளுதல்’ என்ற தலைப்பில், மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் குறும்படம் அல்லது செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ திரைப்படங்களை வடிவமைக்கலாம். அதன் நீளம் 2 முதல் 3 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும். தங்கள் படைப்புகளை மாணவர்கள், வரும் 30ம் தேதிகள் சமர்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் www.ndma.gov.in என்ற இணையதளத்தில் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம். கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லுாரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் இந்த போட்டியில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.