சென்னை: கொய்யாப்பழத்தை எதிர்பார்த்து இருந்தபோது, கோவைப்பழம்தான் கிடைத்திருக்கிறது எனவும், தவெக அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது எனவும் தலைவர்கள் விமர்சித்துள்ளார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ தளி ராமச்சந்திரன்: தேர்தல் நேரத்தில் தவெக கொடுத்த வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. சிறு குறு விவசாயிகளுக்கு முழு கடனையும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடனையும் ரத்து செய்வோம் என தேர்தல் நேரத்தில் தவெக வாக்குறுதி அளித்தது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி: விவசாயிகளுக்கு ஒரு திட்டம்கூட சொல்லவில்லை. கூட்டுறவு விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என விவசாயிகள் எதிர்த்த நிலையில், இது தமிழகத்திற்கு ஏமாற்றமே. ஒரு பட்ஜெட்டியில் 3 சதவீதமாவது வேளாண்மை, கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளுக்கு ஒதுக்கவேண்டும். ஆனால், இங்கு 1 சதவீதம்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் கல்வி துறைக்கு கடந்த ஆட்சியை விடக் குறைவாக ஒதுக்கியுள்ளார்கள். வேலை வாய்ப்பு, மது ஒழிப்பு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி: தவெக கூட்டணி அரசின் பட்ஜெட்டில் எதிர்பார்த்த எந்த சிறப்புக்குரிய அம்சங்களும் இடம்பெறவில்லை. அலங்கார பட்ஜெட்டாக கொடுத்துள்ளார்கள். கட்டிடம் கட்டுவதற்கு பதிலாக வண்ணம் அடிப்பதற்குத்தான் நிதி கொடுத்துள்ளார்கள். பள்ளிக் கல்வித்துறைக்கு நிதியை குறைத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. எல்லோரும் கொய்யாப்பழத்தை எதிர்பாத்து இருந்தபோது, கோவைப்பழம்தான் கிடைத்திருக்கிறது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்: இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தையே அளிக்கிறது. சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நலனுக்கான தனிப்பட்ட திட்டங்களோ, சிறப்பு நிதி ஒதுக்கீடுகளோ அறிவிக்கப்படாமல் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. தவெகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 10% கூட இந்த பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெறவில்லை. வெறும் பெயர் மாற்றங்களாலும், கவர்ச்சி அறிவிப்புகளாலும் மட்டுமே மக்களைத் திருப்திப்படுத்திவிட முடியாது.
கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாமல் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. கொங்கு மண்டல மக்கள் பெரிதும் எதிர்பார்த்த அவிநாசி அத்திக்கடவு திட்ட விரிவாக்கம் பற்றி குறிப்பு ஏதும் இல்லை. வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. மருத்துவ சுற்றுலா பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. 2035ல் 1.5 டிரில்லியன் பொருளாதாரம் என்று ஆசை காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான முன்னெடுப்பு இல்லை.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதை பற்றிய அறிவிப்புகள் இல்லை. வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் ரூ.4000 நிவாரண உதவி வழங்கப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதி வழங்கியது. அது குறித்த அறிவிப்பு இல்லை. ஒப்பந்தப்பணியாளர்கள், தற்காலிக பணியாளர்களின் பணிநிரந்தரம் குறித்த அறிவிப்பு இல்லை. பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் போராடி வரும் நிலையில், அது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: பட்ஜெட்டில் அரசு - தனியார் கூட்டு வினை என்ற அடிப்படையில் நவீன தாராளமய பாதையை ஒட்டியே திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது ஏற்கத்தக்கதல்ல. மக்கள் நல அறிவிப்புகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படவில்லை. முதியோர் உதவித் தொகையும் உயர்த்தப்படவில்லை. பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழுந்திருப்பது என்பதும் ஏமாற்றம் அளிப்பதாகும்.
இளைஞர்களிடம் வேலை வாய்ப்பு குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் உள்ள நேரத்தில் வேலை உருவாக்கம் குறித்த திட்டவட்டமான அறிவிப்புகள் ஏதுமில்லை. வேலையில்லா கால நிவாரணம் அறிவிக்கப்படுமென்ற எதிர்பார்ப்பும் இடம்பெறவில்லை. விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து வரம்பு அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை இதில் இடம் பெறவில்லை. தொழிலாளர் உரிமைகள் பற்றி பட்ஜெட் எந்தக் குறிப்பையும் கொண்டதாக இல்லை.


