Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏமாற்றம்

மானிய விலையில் காஸ் சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டத்தில் வழங்கப்படும் சிலிண்டர்களில் மானிய விலையில் வழங்கும் எண்ணிக்கையை 9ல் இருந்து 4ஆக குறைத்து உத்தரவிட்டு இருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. ஏழை, எளிய மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட இந்த திட்டத்தை முற்றிலும் முடக்கக்கூடிய அளவில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுபாடு நிலவி வருகிறது.

பெட்ரோல், டீசல் சப்ளையை ஓரளவுக்கு சமாளித்து வரும் மோடி அரசால், சமையால் காஸ் சப்ளையை சமாளிக்க முடியவில்லை. சப்ளை செய்யப்படும் நாட்கள் அளவை நீட்டித்தும் கூட பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் கூட பெரிய நகரங்களில் சமையல் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனங்கள் முன்பு காலி சிலிண்டர்களுடன் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டள்ளது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ அரசு கிட்டத்தட்ட ரூ.100 வரை உயர்த்தி இருக்கிறது. இதனால் சென்னையில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.957.50ஆக உள்ளது. கடைகளுக்கு பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டர் விலை எப்போதும் இல்லாத புதிய உச்சமாக ரூ.3283ஐ எட்டி உள்ளது.

காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உஜ்வாலா பயனாளிகளின் சராசரி ஆண்டு நுகர்வுக்கு 4 சிலிண்டர் என்ற எண்ணிக்கையை மோடி அரசு குறைத்து அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மானிய விலையில் ஏழை, எளிய மக்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டத்தை தொடங்கியது. 10.58 கோடி பேர் உஜ்வாலா திட்டத்தில் மானிய விலையில் சிலிண்டர் பெற்று வருகின்றனர். அறிமுகம் செய்யபட்ட முதலில் ஆண்டுதோறும் 12 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்தன.

பின்னர் 2022ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 12 சிலிண்டர் வரை ரூ.200 மானியம் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இந்த மானியத்தொகை ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது. இவ்வாறு ஆண்டுதோறும் வழங்கப்படும் மானிய சிலிண்டர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 9 ஆக குறைக்கப்பட்டது. தற்போது ஈரான் பிரச்னையை காரணம் காட்டி உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு இனி ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் கிடைக்கும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக கூடுதல் செயலாளர் பிரவீன்மால் கனூஜா அறிவித்துள்ளார்.

திடீரென ஓராண்டுக்கான மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை 9ல் இருந்து 4 ஆக குறைத்துள்ளது ஏழை, எளிய மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உஜ்வாலா திட்ட பயனாளிகள் அனைவரும் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். 2016ஆம் ஆண்டு வரை அவர்களில் பெரும்பாலானோர் சமையல் காஸ் பயன்பாட்டிற்கு பழக்கம் இல்லாதவர்கள். அவர்களில் 10.58 கோடி பேரை சமையல் காஸ் பயன்பாட்டிற்கு பழக்கி விட்ட பிறகு இப்போது மானிய சிலிண்டர் எண்ணிக்கையை 4ஆக குறைத்து இருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.