நாட்டில், கடந்த 1951, 1961, 1971 ஆகிய மூன்று ஆண்டுகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. 1971ல் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 10.10 லட்சம் மக்கள் தொகை என்ற அடிப்படையில் 543 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்டுவரப்பட்டது. அதுதான், இன்றுவரை தொடர்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் - இந்தியாவிலேயே தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், ஒன்றிய அரசின் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதன் விளைவாக மக்கள்தொகையில் எண்ணிக்கை விகிதாச்சாரம் நமக்கு குறைந்துவிட்டது.
இதை அடிப்படையாக கொண்டு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை முக்கியமாக கருதி 1976-ல் பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் ஆட்சி நடந்தபோது குடும்ப கட்டுப்பாடு போன்ற இந்தியாவுக்குரிய சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை முறையாக பின்பற்றக்கூடிய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்கிற காரணத்தினால் 2001 வரை, அதாவது அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதே தொகுதிகள்தான் இருக்கவேண்டும் என்று அரசியல் திருத்த சட்டம் 42 கொண்டுவரப்பட்டது. இது, 2001ம் ஆண்டு வரை 543 தொகுதிகளாக நிலைத்தது.
பின்னர், திமுக அங்கம் வகித்த பாஜ தலைமையிலான ஜனநாயக கூட்டணி, ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர், ‘’மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கட்டும். ஆனால், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை கூட்டாமல், குறைக்காமல் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்து கொள்ளலாம்’’ என்று கேட்டுக்கொண்டதால், அரசியல் திருத்த சட்டம் 84-ன்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதாவது 2026-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற தொகுதி 543 ஆகத்தான் தொடரும் என்று கொண்டுவரப்பட்டது.
ஆனால், தற்போது தென்மாநில மக்களின் நலனுக்கு எதிரான பாஜ, ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால், தொகுதி மறுவரையறை செய்து, தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என அதிரடி வியூகம் வகுத்து காய்களை நகர்த்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் தற்போது, தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 23.74 சதவீதமாக இருக்கிறது. மக்கள்தொகை அடிப்படையில் 543 தொகுதிகளை மறுவரையரை செய்கிறபோது, தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 18.97 சதவிகிதமாக குறைந்துவிடும். மக்களவையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதுதான் தமிழ்நாட்டின் ஒற்றை கோரிக்கை.
இதைத்தான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தேர்தல் வேளையில், சப்தம் இல்லாமல் நாடாளுமன்றத்தை கூட்டி, இதுதொடர்பான மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டும் என ஒன்றிய பாஜ அரசு மாஸ்டர் பிளான் போடுகிறது. இந்த பேராபத்தை, உச்சக்கட்ட துரோகத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். ‘’தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பாஜ அரசின் செயல்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்’’ என தனது கருத்தை ஆழமாக பதிவுசெய்துள்ளார். ஒன்றிய அரசின் இந்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என முதல்வர் குரல் கொடுக்கிறார். அவருக்கு துணை நிற்க வேண்டியது தமிழக மக்களின் கடமை மட்டுமல்ல, தென்னிந்திய மக்களின் கடமையும் ஆகும்.
