கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆட்சி நடக்கிறது. துணை முதல்வர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் மாநில தலைவராகவும் பதவி வகிக்கிறார். இரண்டரை ஆண்டுக்கு பிறகு மாநில தலைமை மாற்றம் நடக்கும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வந்தனர். இதனால் சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே ஒரு பனிப்போர் நிலவி வந்தது. முதல்வர் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு எடுக்கும். என்னை விலக சொன்னால் விலகுவேன். அடுத்த 2 ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதித்தால் நீடிப்பேன் என்று சித்தராமையா தெளிவாக குறிப்பிட்டார்.
இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் தலைமை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் பாகல்கோட்டை, தாவணகெரே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலுக்கு பிறகு மாநிலத்தில் தலைமை மாற்றம் நடைபெறும் என்று துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். இதற்கிடையில் மூத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர், முதல்வர் மாற்றம் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. எங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். அதற்காக அமைச்சரவை விரிவாக்கம் நடத்தப்பட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர்.
இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் பிரதிநிதியும், மூத்த எம்எல்ஏவுமான டி.பி.ஜெயசந்திரா, 40 எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு அமைச்சரவையில் உள்ள இளையவர்களை நீக்கிவிட்டு மூத்த எம்எல்ஏக்களுக்கு அடுத்த இரண்டாண்டு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். அடுத்த முறை தேர்தலில் சீட் கிடைக்கிறதோ இல்லையோ. கடைசியாக ஒரு முறை அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்காக டெல்லி சென்று மேலிட பார்வையாளர் ரனதீப் சுர்ஜேவாலாவை சந்தித்து கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளனர்.
காங்கிரஸ் மாநில தலைவராக இருக்கும் டி.கே.சிவகுமாருக்கு கட்சியில் அடுத்தடுத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே போராட்டமாகிவிட்டது. இதில் இடைத்தேர்தல் வெற்றியை கட்சி மேலிடத்துக்கு காணிக்கையாக்க வேண்டிய கடமையும் இருக்கிறது. இப்படியே தனது முதல்வர் பதவி என்ற கனவு வெறும் கனவாகவே முடிந்துவிடுமா என்ற வருத்தத்தில் இருக்கிறார். ஆனால் மே 15க்கு பிறகு டி.கே.சிவகுமார் முதல்வராவது உறுதி என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். கட்சி மேலிடம் உத்தரவிட்டால் பதவியை தியாகம் செய்ய தயாராக இருக்கிறார் சித்தராமையா என்று அவரது ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜண்ணா தெரிவித்துள்ளார். இந்த குழப்பத்துக்கு நடுவே ஐந்தாண்டும் முதல்வராக நிறைவு செய்து விட வேண்டும் என்று சித்தராமையா திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.
இதற்கிடையில் கட்சி மேலிடம் முதல்வரை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தால் அடுத்து தலித் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மல்லிகார்ஜூன கார்கேவே முதல்வராக நியமிக்கப்பட்டாலும் அனைவரும் ஆதரவளிப்போம் என்று உள்துறை அமைச்சர பரமேஸ்வர் புதிய வியூகம் வகுத்து பேசி வருகிறார். முதல்வர் மாற்றம் என்பது மாநில காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள லாபியே தவிர, கட்சி மேலிடம் அது குறித்து எதுவும் ஆலோசனை நடத்தவில்லை. அதே போல் கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் என்பது தற்போதைக்கு இல்லை என்று தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முற்றுப்புள்ளிவைத்துள்ளார். இருந்தாலும் மூத்த எம்எல்ஏக்கள் பதவிக்கான போராட்டத்தை கைவிடுவதாக தெரியவில்லை. இதனால் கர்நாடக காங்கிரசில் மேகமூட்டம் நீடிக்கிறது.


