டிஜிட்டல் கைது மோசடி மும்பை போலீஸ் அதிகாரி போல் நடித்து ரூ.19.92 லட்சம் பறித்த இரண்டு பேர் கைது
சென்னை: சென்னை அசோக்நகர் 19வது அவென்யூவில் வசிக்கும் சந்தோஷ் (33). தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி காலை, ஒரு மொபைல் எண்ணிலிருந்து சந்தோஷை அழைத்தவர் தன்னை Fedex கொரியர் நிறுவன ஏஜென்ட் என அறிமுகம் செய்துள்ளார். உங்கள் ஆதார் விவரங்களை யாரோ பயன்படுத்தி சந்தேகத்திற்குரிய பொருட்களை கொரியர் மூலம் அனுப்பியுள்ளனர். மும்பை அந்தேரி கிளை சைபர் க்ரைம் போலீசார் அந்த பார்சலை சோதனை செய்தனர். அதில் 4 காலாவதியான பாஸ்போர்ட்கள், 3 வங்கி கிரெடிட் கார்டு, 2 கிலோ துணிகள், போதை மருந்துகள் என பார்சலின் மொத்த மதிப்பு ரூ.96,710.
”இது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான சட்டவிரோத பண பரிமாற்றம். உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்” என்று பயமுறுத்தியுள்ளார். ”MH0906 மும்பை காவல் துறை” என்ற ஸ்கைப் ஐடியிலிருந்து சந்தோஷுக்கு வீடியோ அழைப்பு வந்தது. அதில் ஒருவர் போலீஸ் சீருடையில், தன்னை மும்பை சைபர் க்ரைம் போலீஸ் கமிஷனர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மற்றும் புலனாய்வு அமலாக்க துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. நீங்கள் விசாரணைக்கு ஒத்துழைத்தால் PCC (Police Clearance Certificate) சான்றிதழ் வழங்கி உங்களை விடுவிக்கலாம். வழக்கிலிருந்து விடுவிக்க பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். சந்தோஷ் மறுத்ததால் அந்த நபர் வங்கியில் தனிநபர் கடன் வாங்கி அனுப்புங்கள் என பயமுறுத்தி மொத்தம் ரூ.19,92,921 பணத்தை மோசடி செய்பவர்களின் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப வைத்தனர்.
இதுகுறித்து செப்டம்பர் 24, 2024 அன்று சந்தோஷ் தெற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சென்னை காவல் ஆணையர் அருண் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தெற்கு மண்டல இணை ஆணையர் கல்யாண் வழிகாட்டுதலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த நரேஷ் கல்யாண் ராவ் ஷிண்டே (20), ஸ்ரீகாந்த் சுரேஷ்ராவ் கத்கர் (34) என்ற 2 பேர் கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
* எச்சரிக்கை
சென்னை காவல் ஆணையர் அருண் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில், எந்த அரசு அதிகாரியும், போலீசாரும் தொலைபேசி அல்லது வீடியோ கால் மூலம் பணம் கேட்க மாட்டார்கள் ”டிஜிட்டல் கைது” என்பது முற்றிலும் போலி - இது சட்டத்தில் இல்லை. அறிமுகமில்லாதவர்கள் அரசு அதிகாரி என கூறினால் நம்ப வேண்டாம். பணம் கொடுக்க வேண்டாம். அவ்வாறு அழைப்பு வந்தால் உடனடியாக அழைப்பை துண்டிக்கவும். www.cybercrime.gov.in வலைதளத்தில் புகார் அளிக்கவும். 1930 என்ற உதவி எண்ணை அழைக்கவும். சைபர் க்ரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.