டிஜிட்டல் கைது மோசடிகளை தவிர்க்க போலி வங்கி கணக்குகள் குறித்து நிலையான வழிகாட்டு நடைமுறை: ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: இந்தியாவில் டிஜிட்டல் கைது மோசடிகளை தடுக்கவும், கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் நாடு தழுவிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளதாவது:
போலி வங்கி கணக்குகள், பணமோசடி மற்றும் இணையவழி மோசடிகளுடன் தொடர்புடைய வங்கி கணக்குகளைக் கையாள்வதற்கான ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை 4 வாரங்களுக்குள் தயாரித்து ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும். டிஜிட்டல் கைது முறைகேடு விவகாரம் தொடர்பாக குறைதீர்ப்பு, பண மீட்பு ஆகிய நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகள், விசாரணை அமைப்புகள், சட்ட அமலாக்க முகமைகள் விரைவாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக, டிஜிட்டல் கைது மோசடிகள் குறித்து புகாரளிப்பதற்கும், கையாளுவதற்கும் உள்ள வழிமுறைகள் குறித்து மாநில அரசுகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாநில சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையங்களை ஏற்படுத்தாத மாநிலங்கள், 4 வாரங்களுக்குள் அந்த நடைமுறையை முடிப்பதோடு, இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்துடன் கலந்தாலோசித்து இ-ஜீரோ எப்.ஐ.ஆர் வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இணையவழி நிதி மோசடியின் காரணமாக எழும் வங்கிக் கணக்கு முடக்க வழக்குகளை விரைவாகத் தீர்த்து வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


