இளம்பெண் பலாத்கார புகார்; கேரள காங்கிரஸ் எம்எல்ஏ நடிகை காரில் தப்பினாரா?.. போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை
திருவனந்தபுரம்: கேரளாவில் இளம்பெண் பலாத்கார புகாரில் கடந்த 6 நாளாக தலைமறைவாக இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ நடிகை காரில் தப்பி சென்றாரா? என்ற தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ராகுல் மாங்கூட்டத்தில். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து அவரை கருச்சிதைவு செய்ய மிரட்டியதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக ராகுல் மாங்கூட்டத்திலும், இளம்பெண்ணும் பேசும் ஆடியோ வெளியானது. அதைத்தொடர்ந்து ராகுல் மாங்கூட்டத்தில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி பாஜ உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் செய்யாமல் இருந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் 27ம் தேதி இளம்பெண் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக புகார் கொடுத்தார்.
இதையடுத்து திருவனந்தபுரம் வலியமலை போலீசார் அவர் மீது பலாத்காரம் மற்றும் கட்டாயப்படுத்தி கருச்சிதைவு செய்ய வைத்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் கொடுத்தது குறித்து அறிந்தவுடன் ராகுல் மாங்கூட்டத்தில் தலைமறைவானார். கடந்த 6 நாளாக எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. ஒரு நடிகைக்கு சொந்தமான சிவப்பு காரில் அவர் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து நடிகையிடம் போலீசார் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளனர். இதற்கிடையே ராகுல் மாங்கூட்டத்தில் முன்ஜாமீன் கோரி திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

