* இன்று உலக நீரிழிவு நோய் தினம்
சென்னை: உலக அளவில் அதிகரித்து வரும் சுகாதார சவால்களில் ஒன்றாக நீரிழிவு நோய் உள்ளது. இதுபற்றி அறிந்து கொள்வது, வராமல் தடுப்பது மற்றும் வந்தால் கட்டுக்குள் வைத்திருப்பது பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி நீரிழிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் வேகமாக மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களின் காரணமாக நீரிழிவு மற்றும் உடல் எடை மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நீரிழிவு அதிகரிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) - இந்திய நீரிழிவு தொடர்பான (ICMR-INDIAB) இணைந்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக புரதம் உட்கொள்ளவது மிகவும் குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் டெல்லியின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த 1,21,077 பேரிடம் எடுக்கப்பட்டது. ஆய்வில் 5 பேரில் ஒருவரிடம் விரிவான உணவுமுறைத் தரவு, மாநிலங்கள் முழுவதும் இந்தியாவின் உணவுமுறை பழக்க வழக்கங்கள், மேக்ரோநியூட்ரியண்ட் உட்கொள்ளல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வளர்சிதை மாற்ற அபாயம் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள மாநிலங்களை மண்டலங்களாக பிரித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் தென் மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம், மேற்கு மண்டலத்தில் வெள்ளை அரிசி அதிகளவில் எடுத்துக் கொள்கின்றனர். வடக்கு, மத்திய மண்டலங்களில் கோதுமையை அதிகளவில் எடுத்துக் கொள்கின்றனர். மாநிலங்கள் முழுவதும் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்வதில் மிகப்பெரிய வேறுபாடு இருந்தபோதிலும், பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் கலோரிகளில் 62 சதவீதம் கார்போஹைட்ரேட் உணவுகள் மூலம் பெறுவது தெரிய வந்திருக்கிறது.
முக்கிய உணவாக தினைகளை கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இதில் முக்கிய வகைகள் விரல் தினை (ராகி), சோளம் (சோளம்) மற்றும் முத்து தினை (பஜ்ரா) ஆகியவை ஆகும். 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கூடுதல் சர்க்கரை எடுத்துக் கொள்கின்றனர். இது தேசிய அளவிலான பரிந்துரையை விட 5 சதவீதம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் மனிதர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் கொழுப்புச்சத்தின் அளவு தேசிய வழிகாட்டுதல்களில் 30 சதவீதம் என இருந்தாலும் ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் குறைவாக உள்ளது. மற்ற அனைத்து மாநிலங்களிலும் தேசிய அளவில் பரிந்துரைக்கப்பட்டதை விட 7 சதவீதம் அதிகமாக கொழுப்பு சத்து நிறைந்த பொருட்களை எடுத்துக் கொள்கின்றனர். இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு வெறும் 12 சதவீதம் மட்டுமே புரதம் எடுத்துக்கொள்கின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களில் அதிகமாக 14 சதவீதம் என்ற நிலை இருக்கிறது. இதில் 9 சதவீதம் புரதம் தாவர உணவுகளில் இருந்து பெறுகிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் புரத உணவு உட்கொள்வது மிகவும் குறைவாக இருக்கிறது. இந்திய உணவுகளை பொறுத்தவரை பெரும்பாலான புரதம் தானியங்கள் பருப்பு வகைகள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கிறது. இந்தியாவில் பால் மற்றும் இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்வது நாடு முழுவதும் குறைவாகவே உள்ளது. புரதச்சத்து நிறைந்த பால், தயிர், முட்டை, மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படாது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வு குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த வெள்ளை அரிசி, அரைத்த முழு தானியங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும்போது அது வளர்சிதை மாற்ற அபாயத்துடன் நீரிழிவு, நீரிழிவுக்கு முந்தைய நிலை மற்றும் உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கிறது. கார்போஹைட்ரேட் உணவுகளிலிருந்து தினசரி கிடைக்கும் கலோரிகளில் 5 சதவீத தாவர அல்லது பால் புரதங்களுடன் மாற்றுவது நீரிழிவு மற்றும் நீரிழிவுக்கு முந்தைய நிலையை உருவாக்கும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது என்பது மாதிரி மாற்று பகுப்பாய்வு மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு மாற்றாக சிவப்பு இறைச்சிகளை எடுத்துக்கொள்ளும்போது அவை பாதுகாப்பானதாக இல்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது.
வெள்ளை அரிசி அல்லது முழு கோதுமை மாவில் இருந்து அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குறைந்த தரமான புரதம் கொண்ட வழக்கமான இந்திய உணவுகள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வின் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது. மொத்த கார்போஹைட்ரேட் உட்கொள்வதை குறைத்து, தாவர அல்லது பால் புரதங்களிலிருந்து அதிக கலோரிகளை எடுத்துக் கொள்ளாமல், வெள்ளை அரிசியிலிருந்து முழு கோதுமை அல்லது தினைக்கு மாறுவது என்பது எந்தவித பலனையும் அளிக்காது. வட மாநிலங்களில் கோதுமையை அதிகளவில் உட்கொள்கின்றனர்.
ஆனாலும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. தமிழகத்தில் 98.7 சதவீதம் பேர் வெள்ளை அரிசி உட்கொள்ளுகின்றனர். தற்போதைய வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக ஏற்படும் மன அழுத்தம், உடற்பயிற்சி இல்லாதது, வறுத்த உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளுதல் போன்றவை காரணமாக நீாிழிவு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. உணவு மானியங்கள் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் கொள்கை சீர்திருத்தங்களை ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது மக்கள் தாவர அடிப்படையிலான மற்றும் பால் புரதங்கள் நிறைந்த உணவு முறைகளையும், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ள உணவுகளை மக்கள் குறைவாகவும் எடுத்துக் கொள்வார்கள்.
இந்தியாவில் 83 சதவீத நடுத்தர வயதினருக்கு உடல் பருமன், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் அபாயம் இருக்கிறது. வரும் காலத்தில் தொற்றா வளர்சிதை மாற்ற நோய்களில் இருந்து தப்பிக்க உணவுப்பழக்கவழக்கம் உள்ளிட்ட வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
