60 வயதுக்கு மேலானாலும் நடிகர்களுக்கு மட்டும் மவுசு; நடிகைகளுக்கு வயதானால் வாய்ப்பு மறுப்பது ஏன்?.. திரையுலகின் பாரபட்சத்தை கடிந்த தியா மிர்சா
மும்பை: வயதான நடிகர்கள் இளம் நடிகைகளுடன் ஜோடி சேரும் நிலையில், மூத்த நடிகைகள் மட்டும் ஓரங்கட்டப்படுவது குறித்துப் பிரபல நடிகை தியா மிர்சா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தியத் திரையுலகில் ஆண், பெண் பாகுபாடு மற்றும் வயது வித்தியாசம் தொடர்பான விவாதங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. பொதுவாக நடிகைகள் 30 வயதைக் கடந்தாலே அவர்களுக்கான திரை வாழ்க்கை முடிந்துவிடும் என்ற தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசியுள்ள நடிகை தியா மிர்சா, ‘எனக்கு 20வது வயது இருக்கும் போதே, 30 வயதுக்கு மேல் உனக்குச் சினிமாவில் வேலை இருக்காது என்று பலர் கூறினார்கள்.
ஆனால், அந்தத் தடையை உடைத்து, தற்போது எனது 40வது வயதிலும் என்னால் சினிமாவில் பணியாற்ற முடிகிறது’ என்றார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், ‘சினிமாவில் 60 அல்லது 70 வயதுடைய கதாநாயகர்கள், தங்களைவிட வயது குறைந்த இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை சாதாரணமாகப் பார்க்கிறோம். ஆனால், ஒரு 60 வயதுடைய நடிகை, 40 வயதுடைய ஆணுடன் காதலிப்பது போன்ற கதாபாத்திரத்தை இங்கே பார்க்கவே முடியாது’ என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும், ‘பெண்களுக்கு வயது கூடினால் அவர்களை அழகாகவோ அல்லது முக்கியமானவர்களாகவோ திரையுலகம் கருதுவதில்லை.
இந்த விஷயத்தில் நடிகை தபு மட்டுமே விதிவிலக்காகத் திகழ்கிறார். திரையுலகம் நினைப்பதை விட, பெண்கள் நினைத்தால் மட்டுமே தங்கள் திரைப்பயணத்தை முடிவு செய்ய முடியும்’ என்று அவர் ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.

