Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விற்பனையில் களைகட்டும் விசேஷ தர்பூசணி!

குமரி மாவட்டத்திற்கு தென்மேற்கு பருவமழை, வடக்கிழக்குப் பருவமழை என இரண்டு பருவ மழை பெய்கிறது. இதன் காரணமாகவும், வேறு பல இயற்கைச் சூழல்களினாலும் இங்கு தென்னை, ரப்பர், வாழை, நெல் போன்ற பயிர்கள் செழிப்பாக வளர்கின்றன. மாவட்டம் முழுக்கவே கன்னிப்பூ, கும்பப்பூ என இருபருவங்களில் நெல் சாகுபடி நடக்கிறது. கன்னிப்பூ சாகு படியின்போது 110 நாட்களில் இருந்து 120 நாட்கள் கொண்ட நெல் ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. கும்பப்பூ சாகுபடியின்போது 135 நாட்களில் இருந்து 155 நாட்களில் பலன் தரக்கூடிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த இருபருவ நெல் சாகுபடியின்போதும் பருவமழை மூலமும், அணைகள் மூலமும் நீர்ப்பாசனம் தங்குதடையின்றி கிடைக்கிறது. குமரி மாவட்டத்தில் சுமார் 10 மாத காலம் மழை கிடைக்கிறது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் குறைவாகத்தான் நிலவும். இந்த சீதோஷ்ண நிலையில் தர்பூசணி போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதில்லை. இருந்தும் ஒரு சில விவசாயிகள் இதுபோன்ற பயிர்களை விளைவித்து வெற்றி பெற்றுவிடுகிறார்கள். அந்த வகையில் நாகர்கோவில் அருகே உள்ள புத்தளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசியரான சாலமோன் ஜீவா தனது வயலில் தர்பூசணியைப் பயிரிட்டு நல்ல விளைச்சல் எடுத்து வருகிறார். இதுகுறித்து அறிந்து அவரைச் சந்தித்தோம்.

``எம்எஸ்சி, பிஎட், எம்பில், பிஎச்டி படித்துவிட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக இருக்கிறேன். எனது தந்தை சாலமோன் ரெத்தினசாமி ஓய்வு பெற்ற வேளாண்மை ஆசிரியர். எனது தாத்தா உள்ளிட்ட முன்னோடிகள் விவசாயிகள். அவர்களின் வழியில் வந்த எனக்கு விவசாய ஆர்வம் இருப்பது இயல்பானதுதான். படிப்பு முடித்து 2007ம் ஆண்டில் வேலை கிடைத்தது. வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற நினைத்தேன். அதன்படி மரபு சார்ந்து வரும் விவசாயத்தை தேர்ந்தெடுத்து, நஞ்சில்லா விவசாயப் பயிர்களை உற்பத்தி செய்ய முடிவு செய்தேன். எனக்குச் சொந்தமாக பால்குளம் விவசாயப் பகுதியில் 10 ஏக்கர் வயல் உள்ளது. இந்த வயலில் நெல் சாகுபடி செய்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான அளவு பாரம்பரிய நெல் சாகுபடி செய்து வருகிறேன். கும்பப்பூ நெல் அறுவடை முடிந்த பிறகு சுமார் 3 மாத காலம் விவசாய நிலம் அப்படியே கிடக்கும். அதில் குறுகியக் கால காய்கறிகளைப் பயிரிட்டு வருகிறேன். இதே முறையில் வருடம் தோறும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறேன்.

கடந்த சில வருடமாக காய்கறிகளுக்கு இடையே தர்பூசணி சாகுபடியும் செய்தேன். தற்போது ஒன்றரை ஏக்கர் பரப்பு கொண்ட வயலில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி வைத்திருக்கிறேன். கடந்த 70 நாட்களுக்கு முன்பு வயலை நன்றாக பண்படுத்தி உழுதேன். அதன்பிறகு காவல்கிணற்றில் இருந்து தர்பூசணி விதைகளை வாங்கி வந்து சாகுபடி செய்தேன். ஒரு பாக்கெட்டின் விலை ரூ.400. மொத்தம் 6 பாக்கெட் விதைகளை ரூ.2400 விலை கொடுத்து வாங்கி சாகுபடி செய்தேன். விதையில் இருந்து இலை வந்து கொடி படரும் தருவாயில் ஆட்டுப்புழுக்கை, தேங்காய்ப் புண்ணாக்குப்பொடி ஆகியவற்றைக் கலந்து உரமாக வைத்தேன்.

வேறு எந்த உரமும் போடவில்லை. ரசாயன உரத்தைக் கொஞ்சம் கூட பயன்படுத்தவில்லை. சாகுபடி செய்த தர்பூசணி செடிகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சி வந்தேன். நீர் மூட்டில் (செடி இருக்கும் இடம்) தேங்காதவாறு பார்த்துக்கொண்டேன். சாகுபடி செய்த 60வது நாளில் இருந்து அறுவடைப்பணி ஆரம்பித்தது. இதுவரை மொத்தம் 7 டன் தர்பூசணி மகசூலாக கிடைத்து இருக்கிறது. இன்னும் 3 டன் காய்கள் நிலத்தில் உள்ளன. குமரி மாவட்டத்திற்கு விற்பனைக்காக வரும் தர்பூசணி பழங்கள் உளுந்தூர்பேட்டை, ஓசூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்துதான் வருகின்றன. சீசன் நேரத்தில் ஒரு கிலோ தர்பூசணியை ரூ.10 என வியாபாரிகள் விற்பனை செய்தார்கள்.

தற்போது தர்பூசணி சீசன் முடிந்திருக்கிறது. வெளி மாவட்டங்களில் இருந்து தர்பூசணி வரத்து குறைந்திருக்கிறது. தற்போது எனது வயலில் சாகுபடி செய்துள்ள தர்பூசணி பழங்களைப் பறித்து காய்கறிக் கடைகளுக்கு விற்பனை செய்கிறேன். என்னிடம் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தர்பூசணியை ரூ.12க்கு கொள்முதல் செய்தார்கள். அதை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கிலோ ரூ.20 என விற்பனை செய்கிறார்கள். இதனால் நான் இப்போது கொடுக்கும் தர்பூசணி பழங்களை கிலோ ரூ.14 என வாங்கிச் செல்கிறார்கள். காய்கறிக் கடைக்காரர் தர்பூசணி பழங்கள் விற்று முடிய முடிய போன் செய்து மீண்டும் மீண்டும் கொண்டு வரச் சொல்கிறார். அவர்களின் தேவைக்கு ஏற்ப பழங்களை அறுவடை செய்து கொடுக்கிறோம்’’ என மகிழ்ச்சி பொங்க பேசினார்.

(சாலமோன் ஜீவாவின் சாகுபடி அனுபவங்கள் அடுத்த இதழிலும் தொடரும்)

தொடர்புக்கு:

பேராசிரியர் சாலமோன் ஜீவா:

94874 82379.