தருமபுரி: பாலக்கோடு அருகே டேங்கர் லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுனர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 15 பயணிகள் படுகாயமடைந்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையில் சாலை நடுவே இருக்கும் செடிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி நடைபெற்றது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி இன்று அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30 பேர் பயணம் மேற்கொண்டனர். அப்போது, வேகமாக வந்த அரசு பேருந்து, நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் அரசு விரைவு பேருந்து ஓட்டுநர் சரவணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த நடத்துனர் சங்கர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



