பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்துள்ளது. 67 சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவிலேயே முதன்முறையாக பீகார் மாநிலத்தில்தான் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பல லட்சம் பேர் வாக்குரிமையை இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ‘இது வாக்கு திருட்டு. பாஜ, தேர்தல் ஆணையத்துடன் நடத்திய கூட்டுச்சதி’ என ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழலில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் 3 மாதங்கள் கடுமையானதாக இருக்கும். மேலும், கிறிஸ்துமஸ், கார்த்திகை திருவிழா, புத்தாண்டு, பொங்கல் விழா என பண்டிகைகளும் களைகட்டும். இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முறையாக நடக்க வாய்ப்பில்லை. எனவே, இதற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதிகள் அமர்வு சில கருத்துகளை முன் வைத்துள்ளது. அதாவது, ‘‘தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளை அவசர கதியில் தொடங்கியது ஏன்? தற்போது நடைபெற்று வரும் பணிகளில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதுதொடர்ந்து நடைபெறலாம். ஆனால் அதில் இருக்கும் சாதக, பாதகங்கள் பற்றிய விவரங்கள் குறித்து அடுத்த 2 வாரங்களில் தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும். கண்டிப்பாக இந்த விவகாரத்தில் சட்ட பிரச்னை குறித்து விசாரணை நடத்தப்படும்.
மேலும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது எந்த நடைமுறை சிறந்ததாக இருக்கின்றதோ, அதனை மேற்கொள்வது குறித்து தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். மனுதாரர்கள் தரப்பிலான சந்தேகங்களுக்கும், உரிய விளக்கம் தர வேண்டும்’’ என கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் எஸ்ஐஆரை கண்டித்து அறிக்கை விட்டு வருகின்றன. வழக்குகளையும் போட்டுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, எஸ்ஐஆருக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளதற்கு தமிழக மக்கள் சார்பில் கண்டனங்கள் வலுத்துள்ளன.
எஸ்ஐஆருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, திமுக வழக்கோடு இணைக்க கோரிய அதிமுகவின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளது. எஸ்ஐஆரை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பிலும், தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் வைகோ, செல்வப்பெருந்தகை, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று, தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலித்தனர். பீகாரை போலவே தமிழகத்திலும் வாக்காளர்கள் பலர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
பண்டிகை காலங்களில் நடத்தப்படும் இப்பணிகளால், வெளியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசிப்பவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது வாக்குரிமையை பாதிக்கும் செயல் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே, தேர்தல் ஆணையம் தமிழக சூழலை புரிந்து கொண்டு, எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வதை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், சட்டப்போராட்டம் இதற்கு சாதகமான முடிவை தருமென மக்கள் உறுதிபட நம்பியுள்ளனர்.
