கோவை: தாராபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக இன்று கோவை வரும் முதல்வர் விஜய், ஹெலிகாப்டரில் கோவையில் இருந்து தாராபுரத்துக்கு செல்கிறார். தாராபுரம் சட்டபேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்துக்கு இன்று கடைசி நாள் ஆகும். இதனால் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் விஜய் இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை பீளமேட்டில் உள்ள விமான நிலையத்துக்கு காலை 9.10 மணிக்கு வரவுள்ளார்.
அவரை அமைச்சர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அதைத் தொடர்ந்து முதல்வர் விஜய் கோவை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக, தாராபுரம் செல்கிறார். அங்கே காலை முதல் மாலை வரை 30 கிலோ மீட்டர் தூர ரோடு ஷோ, பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடுவது என இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
அதைத் தொடர்ந்து மாலை மீண்டும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, கோவை விமான நிலையம் வரவுள்ளார். பின்னர் விமானத்தில் சென்னை புறப்பட்டுச் செல்கிறார். வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தில் தடை ஏற்பட்டால் சாலை மார்க்கமாக ஏற்கனவே அறிவித்த பாதையில் அவர் வாகனத்தில் செல்வார். இதற்கான பயண திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. சாலையில் அவர் பயணம் செய்தால் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

