Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தனுஷ்கோடியில் மணல் புயல்: காற்றின் வேகம் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் சிரமம்!

ராமநாதபுரம்: தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து மணல் புயல் வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து மணல் புயல் வீசி வருவத்தினால் தனுஷ்கோடிக்கு செல்லும் இருசக்கர வாகனம், ஆட்டோக்கள் பலத்த காற்றின் காரணமாக இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் திக்குமுக்காடி வருகின்றனர். மேலும், மணல் புயல் வீசி வருவதனால் சுற்றிப் பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மணல் புயல் காரணமாகவே அதிக நேரம் சுற்றி பார்க்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.