53 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் வரும் சபரிமலையில் 1000 கழிப்பறைகளால் என்ன பலன்? திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்
திருவனந்தபுரம்: 53 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் வரும் சபரிமலையில் 1000 கழிப்பறைகளை மட்டுமே கட்டி வைத்திருப்பதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இந் நிலையில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் திருப்தியாக இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பக்தர்களுக்கு என்னென்ன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 1000 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மண்டல, மகரவிளக்கு சீசனில் 53 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரும் சபரிமலையில் 1000 கழிப்பறைகளால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று நீதிபதிகள் கேட்டனர். வரும் காலத்திலாவது சபரிமலையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து கொடுக்காவிட்டால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
ரசாயனம் கலந்த குங்குமம் தடையை நீக்க முடியாது: சபரிமலை மற்றும் எருமேலியில் ரசாயனம் கலந்த குங்குமம் விற்பனை செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவை நீக்கக் கோரி வியாபாரிகள் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தேவசம் போர்டு பெஞ்ச், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. குங்குமத்தில் ரசாயனம் இல்லை என்று உறுதி செய்தால் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படும். உங்களது வீட்டில் மனைவி, குழந்தைகள் இருந்தால் அவர்களது உடலில் இந்த ரசாயன குங்குமத்தை தேய்த்துப் பாருங்கள். அப்போது அதன் விளைவு உங்களுக்கு தெரியும். ரசாயனம் கலந்த இந்த குங்குமம் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தானதாகும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.
