வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையானவை வாய்ப்புகள் மட்டுமல்ல; எத்தனை தடைகள் வந்தாலும் பின்வாங்காமல் தொடர்ந்து முயற்சி செய்யும் மன உறுதியும்தான்! அதேபோல் வசதிகள் இல்லாத சூழலிலும் விடாமுயற்சியால் வெற்றி பெறுவது மிக பெரிய சாதனை.
நம்முடைய பாதையில் தடைகள் வரும்போது, அவற்றைக் கண்டு நின்றுவிடுகிறோமா அல்லது அவற்றைத் தாண்டிச் செல்லத் துணிகிறோமா என்பதில்தான் நமது வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது.தோல்வி என்பது நம்மை வீழ்த்து வதற்காக வருவதில்லை; இன்னும் வலிமையாக எழுந்து நிற்கக் கற்றுக்கொடுப்பதற்காக வருகிறது. வசதிகள் இல்லாதது நமது குறையாக இருக்கலாம்; ஆனால் மன உறுதி இல்லாததுதான் நமது உண்மையான பலவீனம்.
ஒரு கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் இருந்தான்.அவனுக்குப் பள்ளியில் நடைபெறும் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு.ஆனால், அவனிடம் ஓடுவதற்கான நல்ல காலணிகள் இல்லை. மற்ற மாணவர்கள் விலையுயர்ந்த காலணிகளை அணிந்து பயிற்சி செய்தபோது, அவன் பழைய காலணிகளுடனும் சில நேரங்களில் வெறுங்காலுடனும் பயிற்சி செய்தான்.ஒருநாள் அவனது நண்பன் கேட்டான்:
“உன்னிடம் நல்ல காலணிகள் இல்லை.உன்னால் எப்படி அவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற முடியும்?”என்றான்.
ஆனால் இறுதியில், அவன் முதலிடம் பிடித்தான்!
அவனது உடற்கல்வி ஆசிரியர் அவனைப் பாராட்டி, “உன்னுடைய வெற்றியின் ரகசியம் என்ன?” என்று கேட்டார்.
அவன் சொன்னான்:
“என்னிடம் இல்லாததை நினைத்து நான் கவலைப்படவில்லை.என்னிடம் இருப்பதைப் பயன்படுத்தி என்னால் என்ன செய்ய முடியும் என்றுதான் சிந்தித்தேன்!”என்றான்.அந்தப் பதிலைக் கேட்ட அனைவரும் வியந்தனர்.இந்த சிறுவனை போலவே இல்லாததை நினைத்து கவலைப்படாமல்,இருப்பதை சரியாக பயன்படுத்தினால் வாழ்வில் சாதித்துவிடலாம்.இதற்கு உதாரணமாய் இந்த சாதனை மங்கையை சொல்லலாம்.
லாரி ஓட்டுநரின் மகளான வித்யா ராம்ராஜ், பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் வென்று சாதித்துள்ளார். அதோடு, 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கமும், 4×400 மீட்டர் கலப்புத்தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார்.
பொருளாதாரச் சூழல் காரணமாகத்தன் சக வீராங்கனைகள் தரமான ஷூக்களை அணிந்துகொண்டு ஓடிய நாட்களில், ஷூ போடாமலே, காலில் ரத்தம் வடியவடிய, ஓடிச்சென்று இலக்கை அடைந்து காட்டியவர்தான் வித்யா ராம்ராஜ். அந்த மனஉறுதிதான் இன்று அவரை பல்வேறு சாதனைகளைச் செய்ய உந்தித் தள்ளியிருக்கிறது என்றால் மிகையில்லை.
லாரி டிரைவரான தன் தந்தையின் வருமானத்தில், குடும்பத்தை நடத்துவதே சிரமம் என்ற சூழ்நிலையிலும் தனது கனவுகளுக்குத்தடைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல், வாழ்க்கையில் ஓடி ஜெயித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார் இந்த இளம் வீராங்கனை.
அவரது மகுடத்தில் புதிய வைரமாக, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடை தாண்டும் ஓட்டத்தில் கிடைத்த வெண்கலம் சேர்ந்திருக்கிறது.இந்த வெற்றி மூலம் வித்யா, இந்தியத்தடகள ஜாம்பவானான பி.டி.உஷாவின் 42 வருட தேசிய சாதனையையும் முறியடித்துப் புதிய சாதனை படைத்திருக்கிறார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜப்பானின் நயோகா நகரில் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து இந்தப் போட்டியில் நமது இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்தவகையில், 9வது நாளான நேற்று, நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 வயது வீராங்கனையான வித்யா ராம்ராஜ், 54.75 விநாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
முன்னதாக 2023ம் ஆண்டு சீனாவில் நடந்த ஆசியப்போட்டியில் கலந்து கொண்ட வித்யா, அப்போதும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.அப்போது அவர் பந்தய தூரத்தை 55.42 விநாடிகளில் கடந்து பி.டி.உஷாவின் தேசிய சாதனையை சமன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மதுக்கரை ஒன்றியத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமம்தான் வித்யாவின் சொந்த ஊர்.லாரிஓட்டுநரான அவரது தந்தை ராமராஜ், பெரும் சிரமங்களுக்கு இடையே தன் மூன்று மகள்களுக்கான தேவைகளை செய்து கொடுத்து வளர்த்துள்ளார்.
வித்யாவின் மூத்த அக்காவிற்கு திருமணமாகிவிட, இரட்டையர்களான வித்யா மற்றும், அவரது சகோதரி நித்யா என இருவருமே விளையாட்டு வீராங்கனைகள்தான். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் ஒரு விளையாட்டு வீராங்கனை இருந்தாலே, அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது மிகவும் சிரமம். அப்படி இருக்கையில் இரண்டு வீராங்கனைகள் என்றால் கேட்கவா வேண்டும்.
ஆனாலும் பொருளாதாரம் தங்களது வெற்றிக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்துள்ளனர் இந்த சகோதரிகள். அதனாலேயே, பள்ளிப்பருவத்தில் வித்யாவும், நித்யாவும் விளையாட்டு விடுதியில் தங்கி தங்களது பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சரியான ஷூக்கள்கூட இல்லாத போதும், காலில் ரத்தம் வடிய வடிய ஓட்டங்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கதைகள் வித்யாவின் ஆரம்பகால வாழ்க்கையில் ஏராளம் உண்டு.
கொரோனா ஊரடங்கு, உடல்நலப் பிரச்சினைகள் என பல்வேறு தடைகள் வந்தபோதும், அவற்றை எல்லாம் வெற்றிகரமாகத் தாண்டி, பல போட்டிகளில் கலந்துகொண்டு, பதக்கங்களைப் பெற்றார் வித்யா.மேலும் தேசிய போட்டி களில் பதக்கம் வென்றதால், தற்போது சகோதரிகள் இருவரும் மத்திய அரசுப் பணிகளில் உள்ளனர்.
குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக நிஜவாழ்க்கையிலேயே பல தடைகளைத் தாண்டித்தான், இது போன்று பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.புதிய தேசிய சாதனை படைத்துள்ள வித்யாவிற்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்துச் செய்தி தெரிவித்து உள்ளார்.வித்யாவின் இந்த வெற்றிக்கு தமிழ்நாடு அரசு பாராட்டுகளை தெரிவித்து,அவருக்கு ஊக்கத்தொகையாக ரூ.30 லட்சம் அளித்து உள்ளார்கள்.
தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டி 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது.4 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியில் வித்யா ராமராஜ் இடம்பெற்று, தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்.
ஏற்கனவே கலப்பு 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும் வித்யா இடம்பெற்றிருந்தார்.இதன் மூலம் ஆசிய விளையாட்டில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று வரலாற்றுச்சாதனை படைத்திருக்கிறார்.
வெற்றிக்குத் தேவையான எல்லா வசதிகளும் நமக்குக் கிடைக்க வேண்டும் என்று காத்திருந்தால், நமது பயணம் தொடங்காமலேயே முடிந்துவிடலாம்.இருப்பதை வைத்துத் தொடங்குவதும், தடைகளைத் தாண்டித் தொடர்வதும், இலக்கை அடையும் வரை முயற்சி செய்வதும்தான் உண்மையான மன உறுதி.வித்யா ராம்ராஜைப் போல,தடைகளைக் கண்டு தயங்காமல், மனஉறுதியுடன் தொடர்ந்து ஓடுங்கள்.ஒருநாள் வெற்றி உங்கள் வசமாகும்.


