Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சரியும் சட்டம் ஒழுங்கு

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடன் புதிய கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நாளில் இருந்தே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கோவை சூலூர் பகுதியில் சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடலூரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதும், சென்னை வேளச்சேரியில் மூதாட்டி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதும், மதுராந்தகத்தில் மூதாட்டியை நகைக்காக கொலை செய்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மரக்காணத்தில் 11வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை, கடலூர் அருகே வடலூரில் 30 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்பு உள்ளிட்டவை சட்டம் ஒழுங்கை நிலைகுலைய வைக்கின்றன.

எப்போதுமே கொலை களமாக திகழும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தற்போது கண்ணில் கண்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டி சென்ற ஒரு கும்பல் 10 பேரை வெட்டி காயப்படுத்தியுள்ளது. வேறு வழியின்றி 3 தினங்களுக்கு பின்னர் போலீசார் நேற்று ஒருவரை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்துள்ளனர். தமிழகத்தில் இன்றளவில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், குற்றங்களைக் குறைப்பதற்கும் சில முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார். மாநிலம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த 37 மாவட்டங்கள் மற்றும் 9 முக்கிய நகரங்களை உள்ளடக்கிய 65 காவல் நிலையங்களுடன் கூடிய போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் இப்போதும் நடக்கும் பல வன்முறை சம்பவங்கள் போதையின் பாதையில் திரியும் இளைஞர்களும், சிறுவர்களும் அரிவாளை கையில் எடுத்து கொண்டு களம் புகுந்திருப்பதையே படம் பிடிக்கிறது. பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு பிரிவு உருவாக்கப்படும் என கூறிய தமிழக அரசு, சிங்கப்பெண் அதிரடிப்படையை உருவாக்க உத்தரவிட்டது. ஆனால் அதற்கான தொடக்க விழா கூட இன்னமும் நடத்தப்படவில்லை.

அதற்குள்ளாக தூத்துக்குடி மாவட்டத்தில் அவர்கள் உருவாக்கிய சிங்கப்பெண் அதிரடிப்படையில் பெண் போலீசிடம், இன்ஸ்பெக்டரே சில்மிஷம் செய்த சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. பயிர்களை மேயும் வேலிகளை வைத்து கொண்டு முதல்வர் விஜய், பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு தரப்போகிறார் என்பது கேள்விக்குறியாகி வருகிறது. சென்னையில் 16வயது சிறுவனுக்கு மது கொடுத்துவிட்டு, பாலியல் வன்கொடுமையில் ஏட்டு ஈடுபட்டதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

தவெக ஆட்சி அமைத்து ஒரு மாதம் ஆவதற்குள் பாலியல் வன்கொடுமை, கொலை, ரவுடியிசம் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. விளம்பரங்களிலும், ரீல்ஸ்களிலும் அதிக கவனம் செலுத்தும் அமைச்சர்களும், அரசு நிர்வாகமும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தவெக நிர்வாகிகளே சில இடங்களில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதும், பொதுமக்களை மிரட்டி மாமூல் வாங்கிய சம்பவங்களும் பொதுவெளியில் அரங்கேறி வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காகவே ஆட்சிக்கு வருவதை போல தோற்றத்தை உருவாக்கிய தவெக அரசு, இப்போது ஆட்சியில் அமர்ந்தவுடன் சட்டம் ஒழுங்கில் கோட்டை விடுவது சரியல்ல.