Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை: கலெக்டர் அறிவுறுத்தல்

திருவள்ளூர்: டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து கலெக்டர் வேண்டுகோள் விடுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் த.பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பருவமழை பெய்வதால், நம்மால் தூக்கி எறியப்பட்ட பழைய பாத்திரங்கள் பொருட்கள் மற்றும் பூந்தொட்டிகளில் நீர் தேங்கி டெங்கு பரப்பும் கொசுக்கள் வளர காரணமாகிவிடுகிறது.

தேவையற்ற பொருட்களை தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பழைய பொம்மைகள், பாட்டில்கள் உடைந்த பாத்திரங்கள் போன்ற பொருட்களை பொதுவெளியில் போட்டு வைப்பதால் டெங்கு பரப்பும் சூழலை நாம் தோற்றுவித்துவிடுகிறோம். வீட்டை சுற்றிலும் பழைய பொருட்கள் தேவை இல்லாத நீர்தேக்க பாத்திரங்கள் வைத்திருப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். டயர், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கும் நீரில் உருவாகும் ஏடிஎஸ் கொசுக்கள் டெங்கு வைரஸ் உருவாகிறது.

எனவே மேற்கண்ட பழைய மழைநீர் தேங்கக்கூடிய பொருட்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் உள்ள சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அமைப்பின் மூலம் குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உருவாகிவிடும். மேற்கண்ட பொருட்களை அகற்றுவதன் மூலம் டெங்கு காய்ச்சல் நிகழ்வுகளை முற்றிலும் தடுக்க முடியும். சாதாரணமாக ஏற்படும் சளி, காய்ச்சல் தானாகவே ஓரிரு நாட்களில் குணமாகிவிடும்.

ஆனால் மலேரியா, காய்ச்சல், எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். உரிய ரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவ சிகிச்சை தாமதமானாலோ சுயமாக மருந்துகள் சாப்பிட்டாலோ, போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றாலோ உடல்நலம் கடுமையான பாதிப்புக்குள்ளாக நேரிடும். உரிய சிகிச்சையும் முறையான கவனிப்பும் கொடுத்தால் டெங்கு காய்ச்சலை எளிதாக குணப்படுத்திடலாம்.

டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச்சத்தை குறைத்துவிடும். உப்பு சேர்த்து கஞ்சி, இளநீர் மற்றும் மருத்துவமனையில் கொடுக்கப்படும் உயிர்காக்கும் ஓஆர்ஸ் போன்ற நீராகாரம் தேவையான அளவு கொடுக்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏடிஸ் கொசு உருவாகும் தேவையற்ற பொருட்களை அகற்றிட வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு நன்றாக தேய்த்து கழுவி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.

பகலிலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும். இதன் மூலம் டெங்கு காய்ச்சலிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம். இந்த டெங்கு கொசுவால் ஏற்படும் காய்ச்சல் நோய்க்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும். எனவே பொதுமக்கள் இந்த நோய் தொற்று குறித்து எந்த அச்சமும் கொள்ள வேண்டாம். இவ்வாறு கூறியுள்ளார்.