Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஜனநாயக கடமை...!

தமிழ்நாடு 17வது சட்டமன்ற பொதுத்தேர்தல் இன்று ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் நடக்கிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் ஒன்றாக, தமிழக சட்டப்பேரவை தேர்தல், திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இத்தேர்தலில், 234 தொகுதிகளிலும் 4,023-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. 1.20லட்சம் தமிழக போலீசார் மற்றும் 3.60 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் கடந்த 22 நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நேற்று ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது. மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடக்கிறது. வாக்காளர்களை கவரும் வகையில் இளஞ்சிவப்பு, நீலம், பச்சை நிறங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இத்தேர்தல் திருவிழா, இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. எனவே, மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டியது அவசியமாகிறது. 100 சதவீத வாக்குப்பதிவு இலக்காக கொள்ளப்பட்டிருக்கிறது. 100 சதவீத தேர்தலை வலியுறுத்தி பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடப்பட்டன. விழிப்புணர்வு பேரணிகள், மாரத்தான் ஓட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிகபட்சமாக 78.01 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதுதான், தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். 1967ம் ஆண்டு தேர்தலில் 76.57 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 2006-ல் 70.82 சதவீதம், 2001-ல் 59.07 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 2021ஏப்ரல் 6ம்தேதி நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 72.78 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதம் வாக்கு பதிவானது. குறைந்தபட்சமாக சென்னையில் 59.06 சதவீதம் வாக்கு பதிவானது. கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 74.81 சதவீதம் பேர் வாக்களித்தனர். அதைவிட 2021ல் நடந்த வாக்குப்பதிவு 2.03 சதவீதம் குறைவு ஆகும்.

இம்மாதம் துவக்கத்தில் நடந்துமுடிந்த 2026 அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் தேர்தல் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. இதன் ஒரு பகுதியாக, 22 நாடுகளை சேர்ந்த 38 சர்வதேச பிரதிநிதிகள் இந்தியாவின் தேர்தல் செயல்முறையின் அளவு, துல்லியம், வேகம் ஆகியவற்றை நேரடியாகக் கண்டு பாராட்டினர். இந்த அனுபவத்தை “ஜனநாயகத்தின் உண்மையான திருவிழா”என்று வர்ணித்தனர். அதிக அளவிலான வாக்காளர் பங்கேற்பு, நுணுக்கமான திட்டமிடல், தடையற்ற தேர்தல் செயலாக்கம் ஆகியவற்றை பாராட்டினர். இன்று நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை நடத்திக்காட்டுவது என்ற இலக்கோடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முயற்சிக்கு கைகோர்ப்பது வாக்காளர்களின் கடமை ஆகும். கடந்த சட்டமன்ற தேர்தல்களை காட்டிலும், இம்முறை அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெல்க ஜனநாயகம்.