Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது: டி.ஆர்.பாலு எம்பி வேதனை

அம்பத்தூர்: ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது என அம்பத்தூரில் நடந்த தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்பி கூறியுள்ளார். திமுக சார்பில், தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டம் அம்பத்தூர் மார்க்கெட் அருகே நேற்று நடைபெற்றது. ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, என்.வி.என்.கனிமொழி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு,, திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.

இதில், சென்னை மேயர் பிரியா, மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி, பகுதி செயலாளர் டி.எஸ்.பி.ராஜ கோபால், எம்.டி.ஆர்.நாகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், டி.ஆர்பாலு எம்பி பேசுகையில், “நாடாளுமன்ற அவையில் பிரதமருக்கு என்ன மதிப்பு இருக்கிறதோ, அதே மதிப்பு எதிர்க்கட்சி தலைவருக்கும் உள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் பேரவை தலைவரும் அவரை பேச அனுமதிப்பதில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பேச வைத்து கொண்டிருக்கிறார். தமிழர்கள் என்றைக்கும் தலைகுனியமாட்டார்கள்.

நாடாளுமன்றத்தில் நடப்பதை பார்த்தால் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் தலைகுனிய வேண்டியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள், என்ன பேசுகின்றனர் என கேட்பதில்லை, மிக மோசமான ஜனநாயகம் நாட்டில் நடக்கிறது. கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சி தலைவரை பேசவிடாமல் தடுக்கப்படுகிறார். ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்திலேயே ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது. பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தைகூட இடம் பெறவில்லை. மிக மோசமான முறையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை நடத்தி வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து இன்னும் நிறைவேற வில்லை. கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதாக 3 வருடம் கழித்து பதில் அளித்துள்ளனர். இதைவிட மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட நவிமும்பை, ஆக்ரா, புவனேஷ்வர், இந்தூர் ஆகிய சிறிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்கிய ஒன்றிய அரசு ஏன் மதுரைக்கும், கோவைக்கும் வழங்கவில்லை என கேட்பது எங்களுடைய உரிமை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.2% என கூறினர். அப்படியே குறைத்து கொண்டு கடைசியில் 7.2% என கூறுகின்றனர். இப்படி ஒரு மோசமான நிலையில் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார் பிரதமர் மோடி. இவ்வாறு அவர் பேசினார்.