‘‘டெல்லி மேலிடம் மாஜி போலீஸ்காரர் மீது கடும் கோபத்தில் இருக்காமே’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவர் ஒரு கிணற்றுத்தவளை என கூறியதோடு மர்டர் வழக்கில் தலைமறைவாக இருந்தவருன்னு மிகவும் கொந்தளிப்பாக பேசியவர் தான் மலராத கட்சியின் மாநில தலைவராக இருந்த மாஜி போலீஸ்காரர்.. மம்மி இல்லாத இலைக்கட்சியின் தலையில் ஏறி மிளகாய் அரைக்க போட்ட திட்டத்தை கிராமத்து இலைக்கட்சி தலைவர் தெரிந்து கொண்டாராம்.. நடந்து முடிந்து போன நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்து வெளியே வந்து தனது எதிர்ப்பை காட்டினாராம்.. இதன் காரணமாக தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் கடும் தோல்வியை மலராத கட்சிக் கூட்டணி சந்தித்தது..
இதனால் டெல்லி மேலிடம் கடும் கோபத்தில் இருந்தது.. இனிமேல் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் மாஜி போலீஸ்காரரை தலைவர் பதவியில் இருந்து தூக்கினால் தான் முடியும் என்பதில் உறுதியாக இருந்து அதில் வெற்றி கண்டவர்தான் இந்த இலைக்கட்சி தலைவர்.. ஏற்கனவே அவர் கட்சிக்கு வந்து ரெண்டே ஆண்டில் தலைவர் பதவி கிடைத்ததும் ஆடிய ஆட்டத்தில் முழு கட்சி நிர்வாகிகளும் ரொம்பவே பாதிக்கப்பட்டிருந்தாங்களாம்..
அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் எதிர்ப்புகுரல் எழுப்பியதினால்தான் அவர் இருக்கும் இடம் தெரியாத இடத்துக்கு தூக்கப்பட்டு விட்டாராம்.. என்றாலும் மேலிடத்தின் செல்வாக்கை நேரடியாக பெறவேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டிருக்காராம்.. மும்பை மாநகராட்சி தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது.. இதில் பிரசாரம் செய்யப்போன மாஜி போலீஸ்காரரு, சாதனைகளை சொல்லி ஓட்டுக்கேட்காமல் ஏதேதோ பேசி சிக்கலில் சிக்கிக்கிட்டார். இவரது பேச்சால் மும்பையில் உள்ள தமிழர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பெரும் கவலை உருவாகியிருக்காம்..
அமைதியாக இருக்கும் வாழ்க்கையில் புயலை கிளப்பவேண்டாம் எனவும் அவர்கள் சொல்லிக்கிட்டிருக்காங்க. ஆனால், தனது சர்ச்சை பேச்சை டெல்லி ரசிக்கும் என மாஜி நினைத்திருந்தார். அப்படி ஏதும் நடக்கவில்லை. இப்படி உளறல் பேச்சை பேசி தேவையில்லாத பிரச்னையை உருவாக்கி விட்டாரே என்று டெல்லி மேலிடம் இவர் மீது ஏக கடுப்பில் இருக்கிறதாம். இதனால், நாம் ஒன்று நினைக்க, நடப்பது ஒன்றாக இருக்கிறதே என வேதனையில் இருக்கிறாராம் மாஜி போலீஸ்காரர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தலை மனசுல வைச்சிட்டு முத்து மாவட்டத்தில் குறிப்பிட்ட நிர்வாகியின் ஆண்டு நினைவு நாளில் இலைக்கட்சியின் மாஜிக்கள் அணிவகுத்து போன கதை தெரியுமா?..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூத்துக்குடியில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகியின் 14ம் ஆண்டு நினைவு நாளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இலை கட்சியில் 5 மாஜி அமைச்சர்கள் கலந்து கொண்டனராம்.. இதே இலை கட்சி ஆளும் கட்சியாக இருந்த போது அமைச்சர்களோ, முன்னாள் அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ அல்லது மாஜி எம்எல்ஏக்களோ என யாரும் இந்த பக்கம் வந்து எட்டிக் கூட பார்த்ததில்லையாம்..
தற்போது வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு 5 மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என அணிவகுத்து வந்துவிட்டு சென்றார்களாம்.. இலை கட்சியின் கூட்டணியில் தே.வே.கூ நிர்வாகியின் மகள் நடத்தி வரும் அமைப்பும் இடம்பெற்றுள்ளதாம்.. அவருக்கு அதிமுக கூட்டணியில் பூட்டு மாவட்டத்தில் உள்ள கோட்டை தொகுதியை ஒதுக்கப் போகிறார்களாம்.. இதனால் தான் மாஜிக்கள் அணிவகுத்து முத்து மாவட்டத்திற்கு வந்தார்களாம்.. இதற்கு முன்பு இவர்கள் எங்கே போனார்கள். தேர்தல் என்பதும் ஓடி வருகிறார்களே. எல்லாம் ஓட்டுக்காகத் தான் என்கின்றனர். பேச்சோடு நிற்காமல் தொகுதி கொடுத்தால் சரி என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தொகுதி கிடைக்கும் என பணத்தை தண்ணீரா இறைத்த இலைக்கட்சி மாவட்ட நிர்வாகி திடீரென புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புரம் என முடியும் கடலோர மாவட்டத்தில் மரியாதையுடன் துவங்கும் தொகுதிக்கு தனக்கு தான் என குறிவைத்து இலைக்கட்சியின் சாமியான மாவட்ட நிர்வாகியும், மாஜியான தமிழ் மாதத்தின் பெயரை முன் பாதியாக கொண்டவரும் செலவழித்து வருகிறார்களாம்.. இதற்காக இந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான பழைய நிர்வாகிகளை மாற்றிவிட்டு தனக்கு சாதகமான, ஆதரவாளர்களை சாமியானவர் நியமித்திருக்கிறாராம்..
இவரது நியமனம் கட்சிக்குள் புகைச்சலை கிளப்பிய நிலையில், தற்போது சாமியானவருக்கும், தமிழ் மாதத்தின் பெயரைக் கொண்டவருக்கும் வயிற்றில் புளியை கரைக்கத் தொடங்கியுள்ளதாம்.. இலை மற்றும் தாமரை கட்சி கூட்டணியில் மரியாதையான தொகுதி கூட்டணி கட்சிக்கு தான் ஒதுக்கப்படும் என யாரோ ஒரு மாநில நிர்வாகி கூறிவிட்டு போக சாமியானவரோ, இந்த முறையும் நமக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுமோ, செலவழித்த பணமெல்லாம் அவ்வளவு தானா என வெளியில் சொல்ல முடியாத நிலையில் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சி நிகழ்வில் நீண்டநாளுக்கு பிறகு முகம் காட்டிய யூனியனில் இலாகா இல்லாதவருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லையாமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சி மாஜி தலையான மலையானவரின் கபளீகர கருத்துகள் அரசியலில் அவ்வப்போது சர்ச்சையை கிளப்புகிறதாம்.. மாநிலம் தாவிய அரசியல் விமர்சனம்தான் தலைவரின் தனித்துவம் என ஆதரவுகள் தம்பட்டம் அடிக்கிறதாம்.. இதன் ஒருபகுதியாக புதுச்சேரிக்கு வந்திருந்த மலையானவர், விளையாட்டு இளைஞர்களை கூட்டி விவேக ஆனந்தரை புகழ்ந்தாராம்..
அப்போது இளைஞரணியில் இருந்துதான் தலைவர்களே உருவாகிறார்கள் என ஐஸ் வைத்தாராம்.. மலையானவரின் 3 மணி நேர தாமத வருகையால் ஏற்கனவே விரக்தியில் இருந்த உள்ளூர் பிரபலங்களோ மேடையில் முகம் மலரவில்லையாம்.. மாறாக செல்போனில் மூழ்கிட ட்ரோல் செய்வதையெல்லாம் நாம கண்டுகொள்ள வேண்டாம், ஒருவர் இருந்தாலும் பேச வேண்டியதை பேசிடணும் என கொக்கரித்தாராம்..
மலராத கட்சி நிகழ்வில் நீண்டநாளுக்கு பின் முகம் காட்டிய இலாகா இல்லாத முழம்குமாருக்கோ அங்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லையாம்.. போட்டோகூட விழா மேடையில் இடம்பெறாத நிலையில் என்னை மறந்துட்டாங்கப்பா... என்ற முணுமுணுப்புடன் அங்கிருந்து விடைபெற்றாராம்.. இதுபற்றிதான் மலராத கட்சிக்குள் பரவலாக பேச்சாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

