டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் பயணியை போட்டோ எடுத்த போலீசுக்கு தர்மஅடி
புதுடெல்லி: டெல்லியில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த (சி.ஐ.எஸ்.எஃப்) அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு டெல்லி மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் உள்ள ரயில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி ஒருவர், ரயிலில் பயணித்த பெண் பயணியை அவரது அனுமதியின்றி ரகசியமாக தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை கவனித்த அந்த பெண் மற்றும் சக பயணிகள், சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனடியாக தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பினர். ஆரம்பத்தில் புகைப்படம் எடுக்கவில்லை என்று அவர் மறுத்த போதிலும், பயணிகள் அவரது செல்போன் கேலரியை சோதித்துப் பார்த்தபோது அதில் அந்த பெண்ணின் புகைப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அவரது செல்போனை பறிக்க முயன்றதால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே, மெட்ரோ ரயிலுக்குள் நடந்த இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இச்சம்பவத்தை மிக தீவிரமாக எடுத்துக்கொண்ட சி.ஐ.எஸ்.எஃப் நிர்வாகம், பெண் பயணியிடம் தவறாக நடந்துகொண்ட பாதுகாப்பு அதிகாரியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.