Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லி கார் குண்டு வெடிப்பு எதிரொலி ரயில் நிலையம், கோயில்கள் போன்ற முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரம்: கோவளத்தில் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

காஞ்சிபுரம்: டெல்லியில் நடந்த கார் குண்டுவெடி விபத்தின் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரயில்நிலையம், கோயில்கள் போன்ற முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கோவளத்தில் உள்ள தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண்.1 அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இந்த, சம்பவத்தில் பல வாகனங்கள் எரிந்து நாசமானதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 6.52 மணியளவில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து வெடிபொருள் வெடித்து, பெரிய அளவில் தீயை ஏற்படுத்தி, அப்பகுதி முழுவதும் வேகமாக பரவியதாக நம்பப்படுகிறது. தலைநகரில் ஏற்பட்ட இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பினை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதுமட்டுமின்றி, மக்கள் அதிகம் கூடும் இடங்களான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில், யாரேனும் தங்கி இருக்கிறார்களா என்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், காஞ்சிபுரம் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். *கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் பிரபல தமீம் அன்சாரி தர்கா உள்ளது. இங்கு, இஸ்லாமியர்கள் மட்டுமின்றி ஏராளமான இந்துக்களும் ஆயிரக்கணக்கில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த, தர்காவுக்கு நேற்று ஒரு மின் அஞ்சல் வந்தது.

அதில், தர்காவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது. தர்கா நிர்வாகி, இதுகுறித்து தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்றும், வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. கோவளம் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.